விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் இந்தியா, அடுத்து கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தை சுமார் 6 கிலோமீட்டர் ஆழத்துக்கு அனுப்பும் சமுத்ரயான் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
கடல் வளத்தை ஆய்வு செய்து ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) வடிவமைத்து உருவாக்கி உள்ளது.
வாகனத்தின் வடிவமைப்பு நிறைவடைந்து, சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமுத்ரயான் திட்டப்பணிகள் மற்றும் ஆய்வுக்கலனை, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அப்போது, நிலையான கடல் வளங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ‘சமுத்ரயான்’ திட்டம் கவனம் செலுத்துகிறது என கிரண் ரிஜிஜு பேசினார்.
இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘அடுத்து சமுத்ரயான் திட்டம். இது ‘மத்ஸ்யா 6000′ நீர்மூழ்கிக் கலன். சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக, 6 கி.மீ. கடல் ஆழத்துக்கு மூன்று மனிதர்களை இந்த நீர்மூழ்கி வாகனத்தில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் ஆய்வுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும்.
இந்தத் திட்டம் கடல் சூழலை சீர்குலைக்காது. இந்தத் திட்டம் பிரதமரின் நீலப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த ‘மத்ஸ்யா 6000’ வாகனம் தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு சோதனை அடிப்படையில் கடலில் இறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை உயரதிகாரிகள், “இந்த சமுத்ரயான் திட்டம் 2026-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம் அதன் ஒரு முன்னோட்டமாக அடுத்த ஆண்டு முதல் அரையாண்டில் இந்த ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை 500 மீட்டர் கடலில் இறக்கி சோதனை செய்ய இருக்கிறோம்.
கடந்த ஜூன் மாதத்தில் டைட்டானிக் கப்பல் சென்று வெடித்த நிலையில் இந்த வாகனம் முழு முயற்சியுடன் பாதுகாப்பான வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சிலை காணும் சிலம்பொலி ! ஸ்ரீராம் சர்மா