தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது: காரணம் என்ன?

இந்தியா

தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணத்துக்கு பல நாடுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன. சமீபத்தில் தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. ஆனால், தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதையடுத்து, இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக்கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், “திருமணத்துக்கான இணையரைத் தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

Same sex marriage cannot be legally recognized

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு, மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “தன்பாலின உறவாளர்கள் திருமண வாழ்க்கையை, இந்திய குடும்பமுறையுடன் ஒப்பிட முடியாது. தன்பாலின உறவாளர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் நடைமுறையில் இருக்கும் குடும்ப நடைமுறையுடன் ஒப்பிட முடியாது.

தன்பாலின உறவாளர்கள் சேர்ந்து வாழ்வதும், இணை சேர்வதும் தற்போது குற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதை இந்திய குடும்ப அலகு முறையுடன் ஒப்பிட முடியாது.

உயிரியல் ரீதியான ஆண் – பெண், கணவன் – மனைவியாக இணைந்து வாழ்ந்து, அவர்கள் பெற்றெடுத்து வளர்க்கப்படுபவர்கள் தான் குழந்தைகளாக கருதப்படுவர்.

திருமணப் பந்தத்தில் இணையும் ஆணும், பெண்ணும் பொது முக்கியத்துவம் கொண்ட குடும்பத்தை உருவாக்குகின்றனர். குடும்பம், சமூகம் சார்ந்தது. இது பல உரிமைகளையும், பொறுப்புகளையும் உள்ளடக்கியது. எனவே, திருமணத்துக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. அதனால் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட சமூக ரீதியிலான உறவுமுறையை அங்கீகரிப்பது அடிப்படை உரிமையாக இருக்காது.

அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது ஷரத்தின்படி, அனைத்து குடிமக்களுக்கும் ஒன்றிணைய உரிமை உள்ளது. ஆனால், அத்தகைய ஒன்றிணைதலுக்கு அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்கான உரிமை குறித்த ஷரத்து 21-இன் கீழ் இதுபோன்ற திருமணங்களுக்கான மறைமுகமான அனுமதியை இதில் சேர்க்கலாம்.

தன்பாலின உறவாளர்களுக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பது, தற்போது நடைமுறையில் உள்ள திருமண சட்டங்களுக்கு எதிரானது. தடை செய்யப்பட்ட இதுபோன்ற உறவுமுறைகளின் நிலை, திருமணங்களின் நிலை, வழக்கத்தில் உள்ள சடங்கு முறைகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானது.

கணவன் மனைவியை பிரதிநிதித்துவப்படுத்தும், ஆண் – பெண் இடையிலான திருமணத்தை சட்டப்பூர்வமான உறவாக அங்கீகரிப்பது மட்டுமே அரசின் நோக்கம். இந்த வழக்கில் மனுதாரர்கள், திருமணம் மற்றும் அதோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களை மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளனர். மேலும், குடும்ப வன்முறை சட்டம் உள்ளிட்ட பிற விதிகளை, தன்பாலின உறவாளர்களின் திருமணங்களுக்கு செயல்படுத்த இயலாது.

மனுதாரர்கள் கோரும் உறவுமுறைகளின் இயல்புகளை தற்போது நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்புகளுக்குள் பொத்திப் பார்க்க முடியுமா என்பது இந்த வழக்கில் எழும் கேள்வி அல்ல. மாறாக, சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற திருமணங்களின் அங்கீகாரத்துடன் தொடர்புடைய பலன்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டங்களை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.

தன்பாலின உறவுகள் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. ஆனால், ஆண் – பெண் இணைந்த திருமண முறையிலான பாலின உறவுகளை மட்டுமே அரசு அங்கீகரிக்கிறது. பிற வகையான திருமணங்கள், தனிநபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட புரிதல்களை அரசு அங்கீகரிக்கவில்லை. அது சட்ட விரோதமானதும் அல்ல” என்று  தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்கிற காரணத்தை தெரிவித்துள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வரகுக் கூழ் வற்றல்

ஆன்லைன் ரம்மி அரசியல்: ஆட்சிக்கு இடையூறாகும் ஆளுநர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *