உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித்தை அரசு அதிகாரிகள் நேற்று(நவம்பர் 24) ஆய்வு செய்துவிட்டு திரும்பும் போது ஏற்பட்ட கலவரத்தில் இது வரை 5 பேர் இறந்துள்ளார்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்துள்ளார்கள்.
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் இருக்கிறது. இது 16ஆம் நூற்றாண்டில் முகலாய தளபதி மிர் இந்து பேக் என்பவரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான விஷ்ணு சங்கர் ஜெயின் மற்றும் சிலர் சம்பலில் உள்ள உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில், ஷாஹி ஜமா மஸ்ஜித் தற்போது இருக்கும் இடத்தில் முன்னதாக கல்கி கடவுளுக்காக கட்டப்பட்ட ஹரிஹர் என்ற இந்து கோவில் இருந்தது
முகலாய மன்னர் பாபர் காலத்தில் இந்த கோவில் இடிக்கப்பட்டு, அங்கு ஷாஹி ஜமா மஸ்ஜித் கட்டப்பட்டது. அதனால் அங்கு இந்துக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும் ஹரிஹர் கோவில் இருந்ததற்கான தடயங்களை உறுதி செய்வதற்கு மஸ்ஜித்தை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை நவம்பர் 19 அன்று விசாரித்த சம்பல் நீதிமன்றம், வழக்கறிஞர் கமிஷனர் (Advocate Commissioner) ஒருவரது தலைமையில் குழு அமைத்து, அன்றே ஷாஹி ஜமா மஸ்ஜித்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் படி அன்றே ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வழக்கறிஞர் கமிஷனர் தலைமையிலான குழுவால் ஆய்வை முழுதாக முடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று (நவம்பர் 24), இந்தக் குழு இரண்டாவது முறையாக ஆய்வு செய்வதற்கு, போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. இந்த ஆய்வு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
ஆய்வை முடித்து விட்டு வெளியே வரும் போது, அங்கு பலர் கூடி போலீஸார் மீதும், ஆய்வுக் குழு மீதும் கல்லெறிந்தனர். பதிலுக்கு போலீஸாரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியிருக்கிறார்கள். கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் தோட்டாக்களை வானை நோக்கி சுட்டுள்ளார்கள்.
இந்த கலவரத்தில் தற்போது வரை, நயீம், பிலால், நவ்மன், மொஹம்மத் கைஃப், மோஹம்மத் ஆயன் ஆகிய 5 பேர் இறந்துள்ளார்கள். சுமார் 36 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து ஷாஹி ஜமா மஸ்ஜித் கமிட்டியின் தலைவர் ஜாபர் அலி கூறுகையில் “சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு அமைதியாக நடந்தது. இதற்கிடையில் ஆய்வை பற்றி ஏதோ வதந்தி பரவத் தொடங்கியதால், மஸ்ஜித் பகுதியில் திரண்ட ஒரு கூட்டம் போலீஸார் மீது கல்லெறியத் தொடங்கியது. சில வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
பின்னர் மக்கள் கூட்டத்திற்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் மக்கள் மீது லத்தி சார்ஜ் செய்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மற்றும் காற்றில் தோட்டாக்களைச் சுட்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார்கள்” என்றார்.
இது குறித்து மொராதாபாத் டெபுட்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிராஜ் பத்திரிகையாளர்களிடம் இன்று (நவம்பர் 25) பேசுகையில் ” கலவரத்தில் இறந்த நயீம், பிலால் மற்றும் நௌமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்றார்.
இதற்கிடையில் கலவரம் நடக்க தொடங்கிய சில மணி நேரத்தில் அங்கு இண்டெர்னேட் சேவைகள் 24 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டன. இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடுத்துள்ள விஷ்ணு சங்கர் ஜெயின் தான் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியும் இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டது என்று வழக்குத் தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்… ஷிண்டேவா… பட்னாவிஸா… பாஜகவின் திட்டம் இதுதான்?
சரிந்தது தங்கம் விலை… நகை பர்ச்சேஸ் பண்ணுவதற்கு சரியான டைம்!