அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த இந்திய வம்சாவளியான பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட சரமாரியான கத்திக்குத்து தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இந்திய வம்சாவளி எழுத்தாளராக அறியப்படும் சல்மான் ருஷ்டி தனது சர்ச்சைக்குரிய புத்தகங்களுக்காக அறியப்பட்டவர்.
இந்நிலையில், நியூயார்க்கில் நேற்று (ஆகஸ்டு 12) சுமார் 2500 பேர் கலந்துகொண்ட கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்று மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கருப்பு நிற ஆடையுடன் முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்திருந்த ஒருவர் அவரை நோக்கி வேகமாக வந்தார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் சல்மான் ருஷ்டியின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் ஒரு நிமிடத்தில் 20 முறைக்கு மேலாக கத்தியால் சரமாரியாக குத்தினார்.
ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் சரிந்து விழுந்த அவரை உடனடியாக ஏர் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹாடி மாதர் என்ற 24 வயதான இளைஞன் நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஈரான் வம்சாவளி என்பதும், தற்போது நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பொது மேடையில் ஆயிரக்கணக்கான முன்னிலையில் நடந்துள்ள இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து பல்வேறு உலக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபல எழுத்தாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சல்மான் ருஷ்டி பக்கம் நிற்போம்!
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர், ”33 ஆண்டுகளாக, சல்மான் ருஷ்டி சுதந்திரம் மற்றும் இருட்டடிப்புக்கு எதிரான போராட்டத்தை கொண்டவர்.
வெறுப்பு மற்றும் காட்டுமிராண்டித்தனமான சக்திகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு இப்போது இரையாகி உள்ளார். அவருடைய போராட்டம் எங்கள் போராட்டம். முன்னெப்போதையும் விட நாங்கள் இப்போது அவர் பக்கம் நிற்கிறோம்.” என்றார்.
சல்மான் ருஷ்டியின் மீதான தாக்குதலுக்கு எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் பென்(Pen) இண்டர்நேஷனல் என்ற என்.ஜி.ஓ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் புர்ஹான் சோன்மேஸ் வெளியிட்டுள்ள பதிவில், ”சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலை PEN இன்டர்நேஷனல் முற்றாக கண்டிக்கிறது. சல்மான் ஒரு மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் PEN சமூகத்தின் அன்பிற்குரிய உறுப்பினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான முஸ்லீம்கள் யார்?
பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கூறுகையில், ”நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதை இப்போதுதான் அறிந்தேன். இவ்வாறு நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. 1989ம் ஆண்டு முதல் மேற்கு நாடுகளில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருந்த அவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதன்முதலில் 7 ஆம் நூற்றாண்டில் இருந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். என்றார்.
மேலும், ‘உண்மையான முஸ்லீம்கள்’ அவர்களின் புனித நூலை மத ரீதியாக பின்பற்றுகிறார்கள். மேலும் அவர்கள் இஸ்லாத்தை விமர்சிப்பவர்களை தாக்குகிறார்கள். போலி முஸ்லிம்கள் மனித நேயத்தை நம்புகிறார்கள், அவர்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். போலி முஸ்லிம்கள் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று இஸ்லாமியர்கள் குறித்து பகடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதால் முற்றிலும் அதிர்ச்சியாக உள்ளேன். அவரது காயங்களில் இருந்து அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன், இருப்பினும், அவருடைய வாழ்க்கை இனி ஒருபோதும் முன்பு போல் இருக்காது என்பதை நான் அறிவேன். சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் ஆக்கப்பூர்வமான கருத்துகளை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலைக்கு தள்ளி உள்ளது’” என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த சல்மான் ருஷ்டி?
கருத்து சுதந்திரம் நிறைந்த அமெரிக்காவில், சல்மான் ருஷ்டி கொல்லப்பட்ட நிலையில், ஒரு எழுத்தாளர் மீது இவ்வளவு வன்மம் ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் அதாவது 1947ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. இவரது முழுப்பெயர் அகமது சல்மான் ருஷ்டி ஆகும். தன்னுடைய 14வது வயதில் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ருஷ்டி, வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.
பின்னர் அங்கேயே குடியுரிமை பெற்று, எழுத்தாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம் க்ரிமஸ். இந்த புத்தகம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய மிட்நைட் சில்ட்ரன் என்ற புத்தகம் எழுத்துலகில் அவருக்கு அடையாளத்தை பெற்று தந்தது. மூன்றாவதாக ஷேம் என்ற நாவலை எழுதினார்.
சர்ச்சையை கிளப்பிய சாத்தானின் கவிதைகள்!
இதனை தொடர்ந்து இவர் எழுதிய ’சாட்டன் வெர்செஸ்’ என்ற அதாவது சாத்தானின் கவிதைகள் எனப்படும் நாவல் புத்தகம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. அந்த புத்தகம் இஸ்லாம் மதத்திற்கு எதிராக உள்ளதாக கூறி 1998ம் ஆண்டு வெளியான இந்த நாவலுக்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நாவலை இந்தியா, பாகிஸ்தான் உட்பட 10க்கும் மேற்பட்ட ஏராளமான நாடுகள் தடை விதித்தன. எனினும் உலகம் முழுவதும் சாட்டன் வெர்சஸ் நாவல் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. இந்த நாவலுக்கு எழுத்துலகின் மிகப்பெரிய விருதான விட்பிரெட் பரிசு வழங்கப்பட்டது.
இதற்கிடையே உலகில் பல நாடுகளிலும் இந்த நாவலுக்கு எதிராக போராட்டம் அதிகரித்தது. இங்கிலாந்தின் ப்ராட்போர்டில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இந்த நாவலின் நகலை எரித்தனர். 1989ம் ஆண்டு ஈரானின் மதத் தலைவர் ஹயதுல்லா ருஹோல்லா கோமேனி சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார். ருஷ்டிக்கு மட்டுமின்றி சாட்டன் வெர்சஸ் நாவலை வெளியிட்டவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளான சல்மான் ருஷ்டிக்கு இங்கிலாந்து ஆதரவளித்தது. இதனால் இங்கிலாந்து மற்றும் ஈரான் இடையே இருந்த உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
தன்னால், இஸ்லாமியர்களுக்கு நிகழ்ந்த கடும் துயரத்திற்கு சல்மான் ருஷ்டி ஆழ்ந்த வருத்தத்தையும் கூறினார். பின்னர் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறி வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மேடையில் பேசிக்கொண்டிருந்த சல்மான் ருஷ்டியை ஈரான் வம்சாவளியான 24 வயது இளைஞன் கத்தியால் குத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.