மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக், புத்திசாலித்தனமாக அவருடைய அடையாளத்தை மறைப்பதற்கு, ஆதி யோகி புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டோவில் பயணித்த ஷாரிக் ஐ.எஸ் பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் தமிழகத்தின் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
கோவையில் பிரேம்ராஜ் என்ற நபரின் பெயரில் ஷாரிக் சிம் கார்டு வாங்கியுள்ளார். அவரது வாட்ஸ் அப் டிபி-யில் ஈஷா ஆதி யோகி சிலையை வைத்துள்ளார். மேலும், கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள எம்விஎம் தங்கும் விடுதியில் கெளரி அருண்குமார் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இதையடுத்து, ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதலில் கோவை ஈஷா யோகா மையம் இருந்ததா, அவர் ஈஷா யோகா மையத்திற்குச் சென்றாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஷாரிக் ஆதி யோகி சிலையை வாட்ஸ் அப் டிபியாக வைத்தது குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அளித்த பேட்டியில், “மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக், ஆதி யோகி மீதான பற்றின் காரணமாக வாட்ஸ் அப் டிபியில் அந்தப் புகைப்படத்தை வைக்கவில்லை. புத்திசாலித்தனமாக ஷாரிக் அவருடைய அடையாளத்தை மறைப்பதற்கு ஆதி யோகி புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார்.
ஈஷா யோகா மையத்திற்கும் எனக்கும் கொலை மிரட்டல்கள் ஒன்றும் புதிதல்ல. சராசரியாக ஒரு ஆண்டிற்கு கணக்கிடமுடியாத அளவிற்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. இருப்பினும் நான் உயிருடன் வாழ்ந்து வருகிறேன்” என்றுள்ளார்.
செல்வம்