புகையிலை விற்பனையை ஒருபோதும் விளம்பரப்படுத்தி விடாதே என்று தந்தை கூறியதால் புகையிலை விளம்பரங்களில் நான் நடிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் சார்பில் வாயில் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்த சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று (மே 30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “நான் இந்திய அணிக்காக விளையாடிய போது புகையிலை விளம்பரங்களில் நடிப்பதற்காக என்னை பலரும் அணுகினர்.
இருப்பினும் அந்த அழைப்புகளை நிராகரித்துவிட்டேன். புகையிலை பொருட்கள் விற்பனையை ஒருபோதும் விளம்பரப்படுத்திவிடாதே என்று தந்தை என்னிடம் கூறினார்.
நம்முடைய வாய் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நான் சிறுவயதில் நிறைய விளையாடுவேன். பெரியவனாக வளர்ந்ததும் ஃபிட்னஸிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தேன்.
உங்கள் இலக்கை நீங்கள் அடைய வேண்டும் என்றால் ஃபிட்னஸ் மிகவும் முக்கியமாகும்.
50 சதவிகித குழந்தைகளுக்கு வாயில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
இந்த பிரச்சனைகள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை குறைத்துவிடுகிறது. ஃபிட்னஸ் ஆக இருப்பது தற்போது ட்ரெண்டாக மாறி வருகிறது. உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலமும் மிக முக்கியமாகும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு என்ன ஆச்சு?