உக்ரைனில் உள்ள கெர்சன் நகருக்கு அருகே உள்ள பெரிய அணையை ரஷ்யா அழித்ததாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அங்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போர் நடவடிக்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலைச் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்யா, 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் உக்ரைன் நாட்டுக்குப் புதிதாக 2. 5 பில்லியன் டாலர் நிதியுதவி அமெரிக்கா வழங்கியது. ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் கெர்சன் நகருக்கு அருகே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் 18 மில்லியன் கன மீட்டர் நீர் வெளியேறி வருகிறது எனவும், இதனால் கரையோரம் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள உக்ரைன் உள்துறை அமைச்சகம், ‘ஆற்றின் வலது கரையில் உள்ள 10 கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான ஜபோரில்லால்யா பகுதியில் அணுமின் நிலையம் உள்ளது. இதற்கு பாதிக்கப்பட்ட நீர்த் தேக்கத்திலிருந்துதான் குளிரூட்டுவதற்கு தேவையான நீர் வழங்கப்படுகிறது.
நீர் வழங்கப்படாவிட்டால் அணுமின் நிலையம் பாதிக்கப்படும்’ என்று கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, சர்வதேச அணுசக்தி கூட்டமைப்பு தனது ட்விட்டரில், உடனடியாக அணுமின் நிலையத்துக்கு ஆபத்து இல்லை என பதிவிட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இவ்வாறு பரபரப்பான சூழல் அங்கு நடந்துகொண்டிருக்க, ரஷ்யா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வெளியாகவில்லை.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் பக்கோடா
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநர் நடத்தும் ஆலோசனை!
தீட்சிதர் குழந்தைத் திருமண வீடியோ- முற்றுப்புள்ளி வைப்பது நல்லது: அமைச்சர் மா.சு.
ஆளுநர் மீது வழக்கா? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!