எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர்  உத்தரவு!

Published On:

| By Jegadeesh

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ராணுவத்துக்கு  ரஷ்ய அதிபர்  புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரில், இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

அதேநேரம் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் புதின் அறிவித்தார்.

இதனிடையே உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் , ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் எல்லை காவலர் தின வாழ்த்து செய்தியில் பேசியுள்ள புதின், “ரஷ்யக் கூட்டமைப்பின் புதிய குடிமக்களுக்கு அனுப்பப்படும் உணவு, மனிதாபமான உதவி, கட்டுமானப் பொருட்கள் உட்பட ராணுவ மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வது அவசியம். அந்த எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கீரைக்கூட்டு

“தாக்குதலுக்கு பயப்பட மாட்டோம்”: ஐடி இயக்குனர் சிவசங்கரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel