வாக்னர் கூலிப்படைக்கு ஆதரவாக செயல்பட்டதாக ரஷ்ய ராணுவ தளபதி செர்ஜி சுரோவிகி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நீடித்து வரும் போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவிகரமாக செயல்பட்ட வாக்னர் குழு அதிபர் புதினுக்கு எதிராக போரை அறிவித்தது. வாக்னர் குழுவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவில் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வாக்னர் கூலிப்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்பட்டதால் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் போரை கைவிடுவதாக அறிவித்தார்.
இந்த போரின் பின்னணியில் இருந்தவர்களை ரஷ்யா தற்போது அடையாளம் கண்டு வருகிறது. அந்தவகையில் வாக்னர் குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ரஷ்ய ராணுவ தளபதி செர்ஜி சுரோவிகின் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரில் தனது தந்திரமான நடவடிக்கைகளின் காரணமாக ரஷ்ய பத்திரிகைகளால் “ஜெனரல் ஆர்மகெடோன்” என்ற செல்லப்பெயரால் செர்ஜி சுரோவிகி அழைக்கப்பட்டார்.
வாக்னர் குழுவின் கிளர்ச்சிக்கு பிறகு கடந்த ஆறு நாட்களாக அவர் பொதுவெளியில் வரவில்லை. செர்ஜி சுரோவிகி தலைமறைவானது குறித்து தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், வாக்னர் குழுவின் கிளர்ச்சியைப் பற்றி செர்ஜி சுரோவிகி ரஷ்ய ராணுவத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததாலும், எவ்ஜெனி பிரிகோஜினிக்கு அவர் உடந்தையாக இருக்கிறாரா என ரஷ்ய அதிகாரிகள் சோதித்து வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் இந்த தகலை மறுத்துள்ளது.
செர்ஜி சுரோவிகி தலைமறைவானது குறித்து ரஷ்ய பத்திரிகையாளர் அலெக்ஸி வெனெடிக்டோவ் கூறும்போது, “சுரோவிகின் கடந்த 21-ஆம் தேதி முதல் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. அவரது மெய்க்காப்பாளர்களும் அமைதியாகிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவ தளபதி செர்ஜி சுரோவிகி கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய முன்னாள் அதிகாரிகள் பலரும் சந்தேகிக்கும் நிலையில் இந்த விவகாரம் மிக முக்கியமான பேசு பொருளாகியுள்ளது.
செல்வம்
மணிப்பூருக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்!
வாட்சப் டிபி: மகளிர் ஆணைய தலைவிக்கு குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் கண்டனம்!