மகாத்மா காந்தி படத்துடன் ரஷ்ய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Russian Beer Can Featuring Gandhi
இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பீர் டின்னில் மகாத்மா காந்தியின் படத்துடன் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது. Rewort’s Hazy என்ற ரஷ்ய நிறுவனம் இந்த பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. மகாத்மா மட்டுமல்ல நெல்சன் மண்டேலா, மதர் தெரசா, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்ற பீர் டின்களையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் புகைப்படம் பீர் டின்னில் இடம் பெற்றது இது முதல்முறையல்ல. கடந்த 2018 ஆம் ஆண்டில், FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியின் போது ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள ஒரு மதுபான விடுதியில் காந்தியின் புகைப்படத்துடன் கூடிய பீரை கால்பந்து ரசிகர்கள் அருந்திய வீடியோ இணையத்தில் பரவியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கனெக்டினெட் நகரை சேர்ந்த நியூஇங்கிலாந்து புருவரீஸ் நிறுவனம் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய பீரை அறிமுகப்படுத்தியது. இந்த பீருக்கு காந்திபாட் என்றே பெயரிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1971 ஆம் ஆண்டு தேசிய தலைவர்களை அவமதிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, நியூ இங்கிலாந்து புருவரீஸ் நிறுவனம், இந்திய மக்களின் சென்டிமென்டை தங்கள் நிறுவனம் அவமதித்து இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தது.