நவீன டாங்கிகள்: ஜெர்மனி, அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா

இந்தியா

உக்ரைனுக்கு நவீன டாங்கிகளை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைனுக்கு 31 எம்1 அப்ராம்ஸ் ரக பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைன் ராணுவம் தங்கள் எல்லையை தற்காத்துக் கொள்ளும் திறனை அதிகரிப்பதற்காகவும், அவர்களது இலக்குகளை அடைவதற்காகவும் இந்த பீரங்கிகள் உதவும் என்று பைடன் கூறியுள்ளார். 

மேலும் இது ரஷ்யாவுக்கான அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ள பைடன், ரஷ்ய ராணுவம் தங்களுக்கு சொந்தமான இடத்துக்குத் திரும்ப சென்றுவிட்டால் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு ஒரு பட்டாலியன் பீரங்கிகளை வழங்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளதாகவும்,

முதற்கட்டமாக 14 லெப்பார்ட் 2 ஏ6 வகை பீரங்கிகள் உக்ரைன் ராணுவத்திடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்தப் போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

‘டாங்கிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை அனுப்புவது எந்த விதத்திலும் மோதலில் ஈடுபடுவதாக ஆகாது என்று ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து கூறுகின்றன.

ஆனால், இதை நாங்கள் ஏற்கவில்லை. ரஷ்யாவைப் பொறுத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது. போர் விரிவடைவதையும் காண்கிறோம்’ என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு ஆளுநர் கொடுத்த டீ… ஆவி பறக்கும் திமுக கூட்டணி! 

இடைத்தேர்தல் : கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த பழனிசாமி

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *