இந்தியாவில் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் சமஸ்கிருத மொழியை மொத்தம் 24,821 பேர் மட்டுமே பேசுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மற்றும் சமஸ்கிருதம் என மொத்தம் 6 மொழிகள் செம்மொழிகளாக உள்ளன. இதில் சமஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகளை பேசுவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது.
சமஸ்கிருதம் அதிக நிதி ஒதுக்கீடு!
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய கலாச்சார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “2018 முதல் 2020 வரை என மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 643.84 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது” என்று தெரிவித்தது.
மற்ற ஐந்து இந்திய செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றுக்குச் செலவிடப்பட்ட மொத்தத் தொகையான ரூ.29 கோடியை விட சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை 22 மடங்கு அதிகம்.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு மொழி அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனத்தை எழுப்பினர்.
சமஸ்கிருத மொழியை மீட்டெடுக்கும் பாஜக, மற்ற மொழிகளின் மீது நடத்திய நேரடி தாக்குதல் என்றும், மொழி பாதுகாப்பு நடவடிக்கையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும் கடும் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.
சமஸ்கிருதம் – ஆர்டிஐ தகவல்!
இந்நிலையில் சமீபத்தில் ஆக்ராவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும் சமூக ஆர்வலருமான டாக்டர். தேவாஷிஷ் பட்டாச்சார்யா சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
அதற்கு மத்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் மொழித் துறை பதில் அளித்துள்ளது.
அதன்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் 0.002 சதவீதம் பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகின்றனர். அதாவது 2011ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 125 கோடி. ஆனால் அதில் வெறும் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் மொழி பேசுகின்றனர்.
பீகார், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் உட்பட இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் உருது மொழியை சுமார் 5 கோடி பேர் பேசுகிறார்கள் மற்றும் அதனை புரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் நாட்டின் அதிகாரப்பூர்வ மற்றும் செம்மொழியாக கருதப்படும் சமஸ்கிருதம் 24,821 பேர் மட்டுமே பேசும் நிலையில் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளது.
எனினும் இந்திய அரசியலமைப்பில் சமஸ்கிருதம் சிறுபான்மை மொழியாக பட்டியலிடப்படவில்லை. மாறாக நாட்டின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சமஸ்கிருதம் உள்ளது.
அழிவின் விளிம்பில் 18 மொழிகள்!
இதுகுறித்து, மொழி பாதுகாப்பில் முன்னின்று செயல்படும் கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தான் நிர்வாகியான மொழியியலாளர் டாக்டர் சப்னா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”சமஸ்கிருதம் மட்டுமல்ல, பிரஜ் பாஷா, அவதி மற்றும் போஜ்புரி உள்ளிட்ட 18 பிராந்திய மொழிகள் இந்தியாவில் மிக குறைவான மக்களால் பேசப்பட்டு வருகிறது.
அவற்றை பாதுகாப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இந்த மொழிகளுக்கான அகராதிகள் தயாராகி வருகின்றன. ஏற்கனவே மூன்று அகராதிகள் தயாரிக்கப்பட்டுவிட்டது. மேலும் 15 மொழிகளுக்கான அகராதிகள் தயாராகி வருகின்றன.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகள்!
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி(52 கோடி) உள்ளது. அதனை தொடர்ந்து பெங்காலி(9.7 கோடி), மராத்தி(8.3 கோடி), தெலுங்கு(8.1 கோடி) மற்றும் தமிழ் (7 கோடி) ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ் மொழியல்ல, நம் உயிர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சினிமாவில் மொழி தடைகள் இல்லை : ஐஸ்வர்யா ராய்