ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போல, எதிர்பாராத விதமாக இந்த அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை எதிர்பார்த்தது தான் எனவும் கூறுகின்றனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “2000 ரூபாய் நோட்டு ஒருபோதும் ‘சுத்தமான’ நோட்டாக இருக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை.
எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசு இதனை திரும்ப பெற்றுள்ளது. 2016ல் நாங்கள் கூறியது சரி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை முட்டாள் தனமானது என்பது உறுதியாகியுள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது, மத்திய அரசும், ரிச்ர்வ் வங்கியும் 500 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகப்படுத்தும் நிர்பந்தத்துக்கு உள்ளாகின.
அதன்படி தற்போது 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை” என்று விமர்த்துள்ளார்.
புழக்கத்தில் இருந்து ரூ.2000 திரும்பப் பெறப்படுவதால் மக்களுக்கு பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.
இதுதொடர்பாக மத்திய அரசின் சிறப்பு சேவைகள் துறை அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:
ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்படுகின்றன?
ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனையை திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், போதுமான அளவில் மற்ற விகிதாசாரத்தில் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்து,
பின்னர் 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. பெரும்பாலான 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன்பு வெளியிடப்பட்டவை. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சாதாரணமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது. பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய இதர குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்” படி, 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூய்மையான ரூபாய் தாள் கொள்கை என்றால் என்ன?
பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் தாள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள கொள்கை இது.
2000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனை நிலை நீடிக்குமா?
2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ பரிவர்த்தனை அந்தஸ்தைத் தொடரும்.
2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?
பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாகப் பெறலாம். இருப்பினும், 2023 செப்டம்பர் 30, அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் அவர்கள் வைத்திருகும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ வங்கிக் கிளைகளை அணுகலாம்
கணக்குகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்.
ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் மாற்றும் வசதி செப்டம்பர் 30 வரை வழங்கப்படும்.
(அகமதாபாத், பெங்களூர், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம்)
2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டப்பூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள செயல்பாட்டு வரம்பு ஏதேனும் உள்ளதா?
பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில்ரூ 20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.
எந்த தேதியிலிருந்து மாற்றிக்கொள்ளும் வசதி கிடைக்கும்?
ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களையோ மே 23ந் தேதி முதல் அணுகி மாற்றும் வசதியைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வங்கியின் கிளைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?
இல்லை. கணக்கு வைத்திருக்காதவர் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த வங்கி கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ 20,000/-.என்னும் வரம்பு வரை மாற்றிக்கொள்ளலாம்
ஒருவருக்கு வேறு நோக்கங்களுக்காக ரூ 20,000/-க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
கட்டுப்பாடுகளின்றி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, பணத் தேவைகளைப் பெறலாம்.
மாற்றிக் கொள்வதற்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் இருக்குமா?
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/ டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவரால் 2000 ரூபாய் நோட்டை உடனடியாக டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?
முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ரூ 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு வங்கி 2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?
சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றால் அல்லது வங்கி அளித்த பதில்/ தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றால், புகார்தாரர், ரிசர்வ் வங்கி – ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம் (RB-IOS), 2021 இன் கீழ் RBI இன் புகார் மேலாண்மை அமைப்பு போர்ட்டலில் (cms.rbi.org.in) புகாரைப் பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
பிரியா
விஜய் சேதுபதியின் புதிய பட அப்டேட்!
PBKS vs RR: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த ராஜஸ்தான்