“ரோஹிணி ஐ.ஏ.எஸ் பற்றி பேசக்கூடாது”: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோஹிணிக்கு எதிராக ரூபா ஐ.பி.எஸ் உட்பட யாரும், எவ்வித கருத்தும் கூறக்கூடாது என்று பெங்களூரு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23 ) உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி தமிழகம் மட்டுமல்லாது, இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ரூபா ஐ.பி.எஸ்.
இவர் அம்மாநிலத்தின் கைவினைப்பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக இருந்தார்.
அண்மையில் இவரது முகநூல் பக்கத்தில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோஹிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருந்த ரோஹிணி, குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வைத்த புகைப்படங்களை ரூபா எடுத்துள்ளதாகவும், ரூபாவிற்கு மனநிலை சார்ந்த பிரச்னை உள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார்.
இரு பெண் அதிகாரிகளுக்கு இடையேயான பிரச்னை மாநில அரசு நிர்வாகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமைச் செயலாளரை சந்தித்து ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சுமத்திக் கொண்டனர்.
இந்த நிலையில் இருவரையும் காத்திருப்புப்பட்டியலில் வைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவதற்கு தடை விதிக்கக் கோரி, ரோஹிணி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இதனை இன்று (பிப்ரவரி 23 ) விசாரித்த நீதிமன்றம், ரூபா உள்ளிட்ட யாரும், ரோஹிணி குறித்து எவ்வித அவதூறு கருத்தும் கூறக்கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் எதிர்தரப்பினர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிமன்றம், விசாரணையை மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!