பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் என்ற மாவட்டம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கு அம்சித்சர் – பதிண்டா நெடுஞ்சாலையோரம் சர்ஹலி காவல் நிலையம் உள்ளது.
இந்த காவல் நிலையத்தின் மீது இன்று (டிசம்பர் 10) அதிகாலை 1 மணியளவில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் காவல் நிலையத்தின் ஜன்னல், கதவில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடி, சுவர் ஆகியவை சேதமடைந்துள்ளன என்று காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பான பாபர் கல்சா இண்டர்நேஷனலின் உறுப்பினரான ரிண்டா என்பவர் மே மாதம் பஞ்சாப் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.
ராக்கெட் லாஞ்சர் நடத்தப்பட்ட காவல்நிலையம் இருக்கும் சர்ஹலி தான் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்விதர் சிங் ரிண்டாவின் சொந்த ஊராகும். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
மே மாதம் பஞ்சாப் உளவுத்துறை தலைமையகம் மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக நேற்று (டிசம்பர் 9) உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்று சர்ஹலி காவல்நிலையம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் தேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளருமான ஜெய்வீர் ஷெர்கில் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”ஊடக செய்திகளின் படி, டர்ன் தரன் காவல் நிலையத்தின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது கடந்த 7 மாதத்தில் காவல் நிலையத்தின் மீது நடத்தப்படும் 2வது தாக்குதல் ஆகும்.
இது மிகவும் கவலை மற்றும் தொல்லை அளிக்கக்கூடியவையாக இருக்கிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததில் இருந்து சட்ட ஒழுங்கு சரிந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலா? இதற்குக் காரணம் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
அதிமுக வழக்கு: பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் பதில்!
மாண்டஸ் பாதிப்பு: முதலமைச்சர் நேரில் ஆய்வு!