முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் , பி.வி.ரமணா மீது விசாரணை நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 20) தெரிவிக்கப்பட்டுள்ளது. permission for investigation on admk ex ministers
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கால தாமதம் செய்கிறார். அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ”தமிழ்நாடு ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை.
சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதில் உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது என்று கூறி, இந்த வழக்கு வரும் டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சந்திரசூட் தலைமையிலான அமர்வு அறிவித்தது.
இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ”டிஜிட்டல் திண்ணை: அதிமுக மாஜிகளின் தலையெழுத்தை மாற்றும் ஆளுநரின் கையெழுத்து!” என்ற தலைப்பில் நமது மின்னம்பலம்.காம் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக வெளியேறிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மாளிகையில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டிருந்தது.
பிரமாணப்பத்திரம் தாக்கல் – விசாரணைக்கு ஒப்புதல்!
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பி.வி,ரமணா மீது விசாரணை நடத்த கடந்த 13ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஒப்புதல் அளிக்கும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும், கே.சி.வீரமணி மீதான புகாரில் விசாரணைக்கு ஒப்புதல் தர அரசிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மசோதாக்களின் நிலவரம்!
மேலும் கடந்த 2020 முதல் ஆண்டு வாரியாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலவரம் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதாக்கள் (181), அவற்றில் ஒப்புதல் வழங்கப்பட்ட மசோதாக்கள் (152), திரும்ப பெறப்பட்ட மசோதாக்கள்(5), குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் பரிந்துரைத்த மசோதாக்கள்(9), ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிய மசோதாக்கள்(10) மற்றும் பரிசீலனையில் உள்ள மசோதாக்கள்(5) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மறுப்பு!
தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றிய அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பான விவரம் கடந்த 18ஆம் தேதி பெறப்பட்டதாகவும், அரசு பரிந்துரைந்த 165 கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மறுப்பு தெரிவித்தும், 53 கைதிகளை விடுவிப்பது பரிசீலனையில் உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்து வரும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் பஞ்சாப் அரசுகளும் வழக்கு தொடுத்துள்ளன.
இந்த நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்ற விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. permission for investigation on admk ex ministers
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
விஜயகாந்துக்கு செயற்கை சுவாச சிகிச்சையா? – தேமுதிக விளக்கம்!