தீயாய் பரவும் வைரஸ் காய்ச்சல்: தப்பிப்பது எப்படி?

Published On:

| By Selvam

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக H3N2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் 30 ஆய்வகங்களில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது. இதில் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ துணை வகையான H3N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

rising cases of cough and fever

மும்பையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் அல்டாஃப் படேல் இந்த வைரஸ் காய்ச்சல் குறித்து கூறும்போது, “H3N2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தினமும் பத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த காய்ச்சல் மக்களிடம் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் நோயாளிகள் மூச்சுத் திணறல் மற்றும் இருமலால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சில நோயாளிகளுக்கு 10 முதல் 12 நாட்கள் வரை நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “H3N2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். இவர்கள் அமோக்ஸிசிலின், நார்ஃப்ளோக்சசின், ஓப்ரோஃப்ளோக்சசின், ஆஃப்லோக்சசின் மற்றும் லெவோஃப்ளோக்சசின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இத்தகைய மருந்துகள் பொதுவாக வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று (URI) சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன. காய்ச்சல், இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல், உடல் வலி, குமட்டல், வாந்தி, அல்லது வயிற்றுப்போக்கு போன்ற சுவாச அறிகுறிகள் H3N2 வைரஸின் பொதுவான அறிகுறிகளாகும்.

ஐந்து முதல் ஏழு நாட்கள் காய்ச்சல் அதிகமாக இருக்கும். காய்ச்சல் குணமான பின்பு மூன்று வாரங்களுக்காவது இருமல் இருக்கும்.

rising cases of cough and fever

காற்று மாசுபாடு காரணமாக வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்த தொற்று பெரும்பாலும் 15 வயது முதல் 50 வயதிற்குப்பட்டவர்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் சுவாச நோய் தொற்று ஏற்படுகிறது.

H3N2 வைரஸ் பாதித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு Oseltamivir, zanamivir, peramivir மற்றும் baloxavir ஆகிய மருந்துகளை கொண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

இதுபோன்ற கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க, மக்கள் ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும். நெரிசலான இடங்களில் முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். தும்மல் மற்றும் இருமலின் போது வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூட வேண்டும்.

அதிகளவில் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கண்கள் மற்றும் மூக்கை தொடுவதை தவிர்க்கவும். காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளவும்.” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

பாலியல் ரீதியாக என் அப்பா என்னை துன்புறுத்தினார் -குஷ்பூ கொடுத்த ஷாக்!

அந்தமான் நிக்கோபார் தீவு: அதிகாலை நிலநடுக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment