காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் விதி மீறியதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (42) தற்போது இங்கிலாந்து பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். பிரபல மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்.
இந்நிலையில் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியவில்லை என்ற சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அவர் காரில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாமல் உரையாற்றும் வீடியோ காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசாங்கம் தொடர்பாக ரிஷி சுனக் பேசுகிறார்.
இங்கிலாந்தில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஸ்பாட் பைனாக, 100 பவுண்டுகள் செலுத்த வேண்டும்.
நீதிமன்றத்திற்குச் சென்றால் 500 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய்) செலுத்த வேண்டும்.
நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் விதியை மீறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை இங்கிலாந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், “இது தவறு என்று முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரதமர் மன்னிப்பு கேட்டார்.
அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்” என ரிஷி சுனக் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று லங்காஷ்யர் போலீஸ் இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம் விதித்துள்ளது
லங்காஷ்யர் போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓடும் காரில் பயணித்த பயணி ஒருவர் சீட் பெல்ட் அணிய தவறியதைக் குறிப்பிடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் இன்று (நேற்று – ஜனவரி 20) லண்டனைச் சேர்ந்த 42 வயது நபருக்கு நிபந்தனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு விதியை மீறி ரிஷி சுனக் அபராதம் செலுத்துவது முதன் முறையல்ல. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி ரிஷி சுனக் டௌனிங் ஸ்ட்ரீட் பார்ட்டியில் கலந்து கொண்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் முன்னால் இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
டிஜிபி மாநாடு: சைலேந்திர பாபுவுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் பணி!
தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்!