ரஷ்யா – உக்ரைன் போர் ஓராண்டாக நீடித்துவரும் நிலையில், ரஷ்யாவுடன் இருதரப்பு உறவு என்ற இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி கூறியுள்ளார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் நேற்றும் இன்றும் (மார்ச் 2) ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன.
இதில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் , அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் குவின் கேங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இன்று (மார்ச் 2) நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேசக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி செய்தியாளர்களிடம் பேசியபோது,
“உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பை இங்கிலாந்து நாட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.நாவின் சாசனம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாக்க நாங்கள் உதவி வருகிறோம்.
நாடுகளுடனான இருதரப்பு உறவு என்பது தங்களுடைய விருப்பம் என்ற இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்” என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்த பிரதமர் மோடி,
“இது போருக்கான காலமில்லை, பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணுங்கள்’’ என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ரஷ்யாவுக்குச் சென்ற இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிப்ரவரி 8 அன்று, புதினை தனியாகச் சந்தித்துப் பேசினார்.
பொதுவாக மற்ற நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத புதின், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரைச் சந்தித்தது பேசுபொருளானது.
இதற்கிடையில், ‘இந்தப் போரை நிறுத்த இந்தியப் பிரதமர் எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்போம்’ என்றது அமெரிக்கா.
தற்போது ஜி20 மாநாட்டுக்கான முன்னோட்டமாக வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுவரும் நிலையில் இந்தக் கூட்டத்தில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்கிறார்.
அந்தச் சமயத்தில், இந்தியாவின் சார்பில் போரை நிறுத்தச் சொல்லி ரஷ்யாவிடம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்
நெல் மூட்டைகளைப் பாதுகாக்க முதல்வருக்கு கோரிக்கை!