76-ஆவது குடியரசு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக இன்று (ஜனவரி 26) கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவும், சிறப்பு விருந்தினரும் இந்தோனேசிய அதிபருமான பிரபோவோ சுபியாண்டோவுடன் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் கடமைப்பாதைக்கு வருகை தந்தனர்.

அவர்களை பிரதமர் மோடி, ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கடமைப்பாதையில் 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர்.
குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், கண்கவர் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணிவகுப்பை கண்டுகளித்தனர்.