ஓராண்டிற்குள் 6வது முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்வு!

Published On:

| By Monisha

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (பிப்ரவரி 8) காலை மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகபட்சமான வட்டியாக 6.50 சதவீதம் உள்ளது.

repo interest rate hike

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருக்கும் என்று கணித்துள்ளோம். 2023-24 நிதியாண்டில், 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

கடந்த ஒரு ஆண்டிற்குள் ரெப்போ வட்டி விகிதம் 6வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வீடு, இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்காகப் பெறப்படும் கடன் வட்டி அதிகரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியது. இதனால் அப்போது, ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது.

2வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்ந்து 4.90 சதவீதமாக ஆனது. ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக ஆனது.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்தது. 5வது முறையாக வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்ந்து 6.25 சதவீதமாக இருந்தது.

கடந்த ஓராண்டிற்குள், ரெப்போ வட்டி விகிதம் 2.5 சதவீதம் உயர்ந்து 2023 பிப்ரவரி மாதத்தில் 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது நடுத்தர மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

மீண்டும் அதிர்ச்சி தரும் தங்கம் விலை!

சென்னையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: துயர நிலை மாறுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel