மீண்டும் ஒரு 1989 : சீனாவில் மாணவர் புரட்சி?

இந்தியா

சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் மாபெரும் மாணவர் புரட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக உலக செய்தி நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

மர்ம தேசமான சீனாவில் அரங்கேறி வரும் சம்பவங்கள் 1989-ல் நடந்த சம்பவத்தை நினைவூட்டுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

1989-ல் அப்படி என்ன நடந்தது?

அதற்கும் தற்போது சீனாவில் நடக்கும் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதை தற்போது பார்க்கலாம்.

கம்யூனிஸ்டு ஆட்சியில் சீனா ஒரு மர்ம தேசமாக மட்டுமே அறியப்படுகிறது. அந்நாட்டில் மக்களின் வாழ்வுமுறை தொடங்கி அரசியல் நிகழ்வுகள் வரை எதையெல்லாம் உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆளும் வர்க்கம் நினைக்கிறதோ அவை மட்டும் தான் சீன பெருஞ்சுவரை தாண்டி உலக மக்களின் பார்வைக்கு கிடைக்கும். அப்படி ஒரு இரும்புக் கோட்டையாகதான் சீனா மாற்றப்பட்டுள்ளது.

அங்கு இணையதளத்தை பயன்படுத்துவதற்கே கடும் கட்டுப்பாடுகள் உண்டு, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என உலகம் முழுக்க கொடிகட்டி பறக்கும் எந்த சமூக வலைதளத்திற்கும் சீனாவில் அனுமதி கிடையாது.

சீன மக்களுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சமூக வலைதளங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அவற்றிலும் கடும் சென்சார் உண்டு. அரசுக்கு எதிராக, அதிபருக்கு எதிராக, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக மூச்சுவிட்டால் கூட போலீஸ் கதவை தட்டிவிடும்.

இப்படிப்பட்ட நாட்டில் தான் 1989-ம் ஆண்டு அரிதினும் அரிதான நிகழ்வு ஒன்று அரங்கேறியது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த ஹுயாவோபாங் (Hu yaobang) காலமானர்.

அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த மாணவர்கள் கூட்டம் அதை ஒரு பெரும் புரட்சியாக மாற்றினர். பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை உணர்வு என எதுவும் அறியாமல் சொந்த நாட்டுக்குள்ளே அடைக்கப்பட்டிருந்த மக்களின் ஆத்திரம் அந்த அஞ்சலி கூட்டத்தில் பீறிட்டது.

டியானென்மென் சதுக்கத்தில்(Tiananmen square) திரண்ட மாணவர்கள் அங்கு இருந்து அகல மறுத்தனர்.

சீன பெருஞ்சுவரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஜனநாயகம் வேண்டும் என குரல் எழுப்பினர்.
போராட்டம் ஒரு மாதத்தை கடந்த நிலையில் டியானன்மென் சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் இருந்த மாணவர்களிடம் கம்யூனிஸ்ட் தலைவர் லாவோ ஜியாங் (zhao Ziyang) நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்த ஒருவாரத்தில் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை போல சீனாவில் ஜனநாயக தேவி சிலையை மாணவர்கள் நிறுவினர்.

அவ்வளவு தான் பொறுத்து பொறுத்து பார்த்த சீன கம்யூனிஸ்டு அரசு பொங்கி எழுந்தது. ஜூன் 3-ம் தேதி பொதுமக்கள் யாரும் டியானன்மென் சதுக்கத்துக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியானது. காலை 6 மணிக்குள் சதுக்கத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற இலக்கோடு சீன ராணுவம் பீரங்கிகளோடும், துப்பாக்கியோடும் களமிறங்கியது. இரவு முழுக்க கேட்ட துப்பாக்கிச் சத்தத்தில் கண்ணில் பட்ட அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பியோட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றரை மாத போராட்டம் முடிவுக்கு வந்தது. சீனாவின் பிடி மீண்டும் கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஜனநாயக தேவியின் சிலை வீழ்த்தப்பட்டது. இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்ன என்பது இன்றுவரை அறியப்படாத மர்மமாகவே தொடர்கிறது.

அதன்பின் தொழில்நுட்பம் வளர வளர சீன அரசு மக்களை கண்காணிக்கும் முறையையும் நவீன படுத்தியது. செயற்கை நுண்ணறிவு, ஃபேசியல் ரெகக்னிசன் என புதிய புதிய தொழில்நுட்பங்கள் வரும்போதெல்லாம் அதை பயன்படுத்தி மக்களை எப்படி கண்காணிப்பது என்பதை தான் சீனா யோசித்தது.

கொரோனா தொற்று பரவலையும் சீனா இதற்காக தான் பயன்படுத்தி கொண்டது. ஸ்பெசல் ஹெல்த் கோடு என்கிற திட்டத்தை அறிவித்து குடிமக்களின் பயன்பாட்டுக்கு செயலியை வழங்கிய சீனா அதன் மூலமும் மக்களின் நகர்வை கண்காணிக்க தொடங்கியது.

ஒரு பக்கம் கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் வெறுமை, தொழில் பாதிப்பு, இன்னொரு பக்கம் அரசின் தீவிர கண்காணிப்பு என இவை எல்லாம் சேர்ந்துதான் தற்போது ஊரடங்குக்கு எதிரான போராட்டமாக வெடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் 50 பல்கலைக் கழகங்களில் போராட்டம் நடந்து வருவதாக தெரியவருகிறது.

சீனாவின் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் படித்த சின்ஹுவா பல்கலைக் கழகம்(Tsinghua University) தொடங்கி மேற்கில் சிசுவான் பல்கலைக் கழகம்( Sichuan University), கிழக்கில் நாஞ்சிங் கம்யூனிகேசன் பல்கலைக் கழகம் (Nanjing Communications University) வரை போராட்டம் பரவியுள்ளது.

ஜீரோ கோவிட் பாலிசிக்கு எதிரான போராட்டமாக இது அடையாளப்படுத்தப்பட்டாலும் அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராகவும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகவும் எழுப்பப்படும் முழக்கங்களால் ஆளும் அரசு அதிர்ந்துபோயுள்ளது.

1989-ல் நடந்த டியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை இது நினைவுபடுத்துவது சீன ஆட்சியாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்துல் ராஃபிக்

பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய பொறுப்பு!

கூடங்குளத்தால் பாதிப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *