பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.
முன்னதாக, பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் நேற்று(ஜூன் 23) மதிய விருந்து அளித்தார்.
அதில் பிரதமர் மோடி உட்பட இந்தியா மற்றும் அமெரிக்க தொழிலதிபர்களும் முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடிக்கு விதவிதமான உணவுகளும் அந்த விருந்தின் போது பரிமாறப்பட்டன.
இதனிடையே, கமலா ஹாரிஸ் தனக்கும், இந்தியாவுக்குமான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், ”இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்த நாட்டிற்கும் எனக்குமான பிணைப்பு மிகவும் ஆழமானது.
இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் தான் என்னிடத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியது. அவை இந்த முழு உலகத்தையும் வழிநடத்துகிறது என்று நான் நம்புகிறேன்.
இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், “என்னையும் என் சகோதரி மாயாவையும் சிறு வயதில் எங்களது தாய் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு அழைத்து செல்வார்.
இதற்கு பின்னால் ஒரு அழகான காரணம் உள்ளது. ஏனென்றால் என் தாய் இந்தியாவை சேர்ந்தவர். அவர் தான் பிறந்த நாட்டை எங்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைப்பார்.
அது மட்டுமின்றி எங்கள் தாயின் உறவுகளை நாங்கள் மறந்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அதன் விளைவாகத்தான் எங்களை இந்தியாவிற்கு அழைத்து செல்வார்” என்றார்.
தன்னுடைய தாத்தா மற்றும் சென்னை குறித்தான நினைவுகளையும் கமலா ஹாரிஸ் பகிர்ந்துள்ளார்.
அதில், ”மெட்ராஸில் உள்ள என் தாத்தா மற்றும் பாட்டியை பார்க்க நாங்கள் செல்வோம். என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் என் தாத்தாவும் ஒருவர். என் குழந்தை பருவம் முழுவதும் நண்பர்களாக இருந்தோம்.
என் தாத்தாவுக்கு பேரக்குழந்தைகள் மீது அன்பு அதிகம். அதிலும் குறிப்பாக நான் மூத்தவள் என்பதால் அவருக்கு என் மீது தனிப்பிரியம் உண்டு. அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற என் தாத்தா தினமும் கடற்கரையில் அவருடைய நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வார்.
அப்போது நான் அவரது கையை பிடித்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனமாக கேட்பேன்.
அப்போது தான் நான் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் இந்தியாவின் சுதந்திரம் பற்றி தெரிந்து கொண்டேன். என் தாத்தா அவர் நண்பர்களுடன் ஊழலை எதிர்த்து போராடுவது பற்றியும் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசியது எனக்கு எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது.
அப்போது தாத்தாவுடன் ஏற்பட்ட அந்த உரையாடல் தான் என்னிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் தற்போது இந்த நிலைமையில் இருப்பதற்கு என் தாத்தா பி.வி.கோபாலன் மற்றும் தாய் சியாமளா தான் காரணம். அவர்கள் தந்த மன உறுதியும் , நம்பிக்கையும் தான் இன்று நான் அமெரிக்காவின் துணை அதிபராக உங்கள் முன் நிற்பதற்கு காரணம்” என்றார் கமலா ஹாரிஸ்.
அப்போது, பிரதமர் மோடிக்கும் நன்றி சொல்ல கமலா ஹாரிஸ் மறக்க வில்லை.
“இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி வரும் பிரதமர் மோடிக்கும் நன்றி. 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகின் வல்லரசு நாடாக வருவதற்கு அவர் உதவி வருகிறார்.
ஜி 20 மாநாட்டில் உங்களின் தலைமைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் குவாட் அமைப்பிற்கு புத்துயிர் கொடுத்துள்ளீர்கள்”என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மேல் வரி குறைப்பு: குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவிப்பு!
காங்கிரஸிற்கும் திமுகவிற்கும் உரசலா?: செல்லூர் ராஜு