இந்த செய்தியின் தலைப்பைப் பார்த்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி, கட்டுரையை படிக்க உள்ளே வந்துள்ளீர்கள் எனத் தெரிகிறது. கொஞ்சம் கண்களை மூடி டைம் டிராவல் செய்து ஒரு பத்து ஆண்டுகள் பின் செல்லுங்கள்.
தற்போது ஆண்டு 2015. ‘பிரேமம்’ படம் வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இளைஞர்கள் மத்தியில் பல ‘டிரெண்ட்களை’ அறிமுகப்படுத்திய ஆண்டு.
கருப்பு சட்டை, பெரிய தாடி, மலர் டீச்சர், மடோனா செபாஸ்டின் எனப் பலவற்றை நமக்கு அறிமுகப்படுத்திய ஆண்டு அது. அந்தப் படத்தில், மிக ரசிக்கப்பட்ட சீன் மடோனா செபாஸ்டின் ரெட் வெல்வெட் கேக் சாப்பிடும் காட்சி.
நம்மில் பலருக்கும் ரெட் வெல்வெட் கேக்கை அறிமுகப்படுத்திய காட்சியாக அது இருந்திருக்க வாய்ப்புண்டு. கேக்கை ஸ்பூனால் சாப்பிடும் முறையை எவரும் அதுவரை திரைப்படங்களில் பெரிதாக பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அந்த ஸ்பூனை எடுத்து அந்த வசீகர சிகப்பு நிறம் கொண்ட ரெட் வெல்வெட் கேக்கை அழகாகப் பிரித்து மடோனா சாப்பிடும் காட்சி ராஜேஷ் முருகேசனின் இசையில் மிக ரம்மியமாக நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கும் .
சரி தானே? ஆனால், தற்போது இந்த செய்தியை படித்த பின்பு அதே உணர்வை அந்த காட்சி நமக்குத் தர வாய்ப்புகள் மிகக் குறைவு.
ஆம், உணவுகளில் கலப்படம் என்கிறது மாறி கலப்படங்களுக்கு மத்தியில் சிறந்த உணவுகளை தேர்ந்தெடுக்கும் காலத்தில் நாம் தற்போது இருந்து வருகிறோம் என்பதை மீண்டும் நமக்கு உணர்த்துகிறது கர்நாடகா உணவு பாதுகாப்புத் துறையின் சமீபத்திய ஆய்வு அறிக்கை.
அந்த மாநிலத்தில் சுமார் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சுமார் 12 மாதிரிகளில் கேன்சரை உண்டாக்கும் செயற்கை ரசாயனப் பொருட்கள் இடம்பெற்றுள்ளது எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
“மார்கெட்டில் பிரபலமான ‘ரெட் வெல்வெட்’, ‘பிளாக் ஃபாரஸ்ட்’ ஆகிய கேக் வகைகளில் வசீகரமான தோற்றத்திற்காக பல்வேறு செயற்கை நிறங்கள் அதில் சேர்க்கப் படுகிறது.
இவைகளால், கேன்சர் உட்பட பல்வேறு அபாயகர நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ‘ இது போன்ற ஃபான்சி கேக் வகைகளில், Allura Red, Sunset Yellow FCF, Tartrazine, Carmosisine போன்ற பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் சேர்க்கப்படுகிறது’ என இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோபி மஞ்சூரியன், கெபாப், பானி பூரி சாஸ் உள்ளிட்ட உணவு பொருட்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாதத்தில் மட்டும், ரயில் நிலையங்களில் இருக்கும் 142 உணவகங்கள், சுற்றுலாத்தளங்களில் இருக்கும் 35 உணவகங்கள் ஆகிய இடங்களில் சரியான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என அம்மாநில உணவு பாதுகாப்புத் துறை சோதனை செய்துள்ளது.
இது போன்ற அபாயகரமான, அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்களை, பொருட்களை உணவுகளில் பயன்படுத்தும் உணவகங்களுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’!
”அதிமுக பிரிந்துவிட்டதுனு இனி சொல்லாதீங்க” : எடப்பாடி ஆதங்கம்!
பிக் பாஸ் சீசன் 8 : ’என் இடுப்ப தொட்டா ஃபேன்ஸ் கோவிச்சிப்பாங்க!’ – தர்ஷா குப்தா