ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை: என்ன காரணம்?

Published On:

| By Monisha

Reasons behind Gold Rates Fluctuation

தங்கம் விலை சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு ரூ.42,000-க்கு இறங்கிய நிலையில் அடுத்த நான்கு நாட்களிலேயே அக்டோபர் 7ஆம் தேதி காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.5,305-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.42,440-க்கும் விற்கப்பட்டது. அன்று மாலையே தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,370-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.42,960-க்கும் விற்பனை ஆனது.

படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,660 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.45,280 ஆகவும் விற்கப்பட்டது. ஏழு மாதங்களுக்கு பிறகு, ரூ.42,000-த்தை தொட்ட ஒரு பவுன் தங்கம், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தொடங்கி கிட்டதட்ட இரண்டு வாரங்களில் ரூ.45,000-த்தை தொட்டது மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அக்டோபர் 25 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,700-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.45360-க்கும் விற்பனை ஆனது. இப்படியே தங்கம் விலை உயருமா என்கிற கேள்வியுடன் அதற்கான காரணம் குறித்தும் பேசுகிறார்கள் துறை சார்ந்தவர்கள்…

“பொதுவாகவே உலகில் பரபரப்பான மற்றும் நிச்சயமற்ற சூழல் ஏற்படும்போது தங்கம் விலை நிச்சயம் உயரும். அதன்படி தற்போது அதிகரித்து வரும் தங்கம் விலைக்கு காரணம் இஸ்ரேல் – பாலஸ்தீன போர். ஆனால், தங்கம் விலை உயர்வுக்கு இது மட்டும்தான் காரணமா என்று பார்த்தால், அமெரிக்காவின் பொருளாதாரம் சார்ந்த புள்ளி விவரங்களும் மிக முக்கிய காரணம். தங்கத்தின் விலை எப்போதுமே அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைப் பொறுத்து நகர்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகதான் இருக்கிறது. மேலும் கடனுக்கான வட்டி விகிதம் 5.25 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பணவீக்கத்தை 2 சதவிகிதமாக கொண்டு வருவதுதான் அமெரிக்க பெடரலின் முக்கிய இலக்காக இருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமெரிக்க பெடரல் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாதமும் அந்த நாட்டின் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகும். அதேபோல் வேலையில்லாமல் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் வெளியிடப்படும். சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி, வேலையில்லாமல் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படியென்றால், பெரும்பாலான மக்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளுடன் இருப்பதாக பொருள் கொள்ளப்படுகிறது.

பொதுவாகவே வேலைவாய்ப்புக்கள் பெருகும்போது செலவுகளும் அதிகரிக்கும், விலைவாசியும் அதிகரிக்கும். இதன் எதிரொலியாக பணவீக்கமும் அதிகரிக்கும். இனி அமெரிக்காவில் இவையெல்லாம் தொடர் நிகழ்வுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க பெடரலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் வட்டி விகிதத்தை அதிகரிப்பார்கள் என்று ஒருபக்கம் இருந்தாலும், ஏற்கனவே வட்டி விகிதம் உச்சத்தில் இருக்கும் நிலையில் மீண்டும் உயர்த்தினால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என்கிற அச்சமும் அமெரிக்க பெடரலுக்கு இருக்கிறது.

பெரும்பாலும் வட்டி விகிதம் அதிகரிக்கும்போது தங்கம் விலை சரிவது வாடிக்கை. ஒருவேளை பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என்று கருதி அமெரிக்க பெடரல் வட்டி விகிதத்தை உயர்த்தும் முயற்சியை காலம் தாழ்த்தினாலோ அல்லது கைவிட்டாலோ, அது தங்கத்துக்கு நிச்சயமாக சாதகமாக அமைந்து விலை தடாலடியாக உயரும். அமெரிக்க டாலரின் மதிப்பானது பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பா போன்ற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது அதிகரித்து தான் வருகிறது. இப்படி டாலரின் மதிப்பு அதிகரிப்பதும், இறங்குவதும் டாலர் இன்டெக்ஸ் குறியீட்டை வைத்து அளவிடப்படுகிறது.

டாலர் இன்டெக்ஸ் 100-க்கு கீழ் செல்லும் போதெல்லாம் தங்கம் விலை ஏறும். ஆனால் தற்போது டாலர் இன்டெக்ஸ் 106 ஆக இருந்தும் தங்கம் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணமாக இஸ்ரேல்- பாலஸ்தீன போரை சொல்லலாம். ஆனால் இது ஒரு தற்காலிக நிகழ்வுதான். நாளைக்கே போர் நின்றாலும், அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் தங்கம் விலை சுமார் 100 டாலர் வரை கூட இறங்கலாம்.

ரஷ்ய-உக்ரைன் போர் போல, இந்த போரும் நீண்ட காலத்துக்கு நீடித்தால் இது சந்தையில் சாதாரண நிகழ்வாகி தங்கம் விலையை பாதிக்காது. இன்றைய சூழலில், தங்கம் விலை குறையவே வாய்ப்பில்லை. ஆனால் சந்தையில் என்ன வேண்டுமானாலும், எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: பொன்னாங்கண்ணி குழம்பு

டிஜிட்டல் திண்ணை: ரவுடி கருக்கா வினோத்தை ஏவி விட்ட பாஜக? ஆளுநருக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share