குளிர்ந்த நீரில் ஊற வச்சா சாதமாக மாறும் ‘மேஜிக்’ அரிசி… என்ன நடக்கும்?
பொதுவாக அரிசியை வெந்நீரில் கொதிக்க வைத்து சமைப்போம். அஸ்ஸாமின் மேற்கு பகுதியில் Agonibora என்கிற அரிசி ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சோறாக்க வெந்நீர் தேவைப்படாது. குளிர்ந்த நீரில் ஊற வைத்தாலே, 30 நிமிடங்களில் சோறாக மாறி விடும்.
தற்போது, இந்த ரக அரிசியை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலும் பரிச்சாத்திய முறையில் பயிரிடப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த மாவட்டத்தில் மட்டும் அகோனிபோரா ரக அரிசியை பயிரிட வைக்கும் காலநிலை உள்ளதாக சொல்லப்படுகிறது.
பாலக்காடு மாவட்டத்திலுள்ள அதாச்சி குழுமம் தங்களுக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தில் இந்த ரக அரிசியை பரிச்சாத்திய முறையில் பயிரிட்டது. கிட்டத்தட்ட 110 நாள்களில் இந்த நெல் அறுவடை செய்யப்பட்டது. 12 சென்ட் நிலத்தில் இருந்து 170 கிலோ அரிசி கிடைத்துள்ளது.
அகோனிபோரா ரகம் மட்டுமல்லாமல் உள்நாட்டு, வெளிநாட்டு ரகங்களை சேர்ந்த 37 ரக அரிசி அதாச்சி குழுமத்தால், இந்தியா முழுவதும் பரிச்சாத்திய முறையில் பயிரிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேஜிக் அரிசி என்று அழைக்கப்படும் அகோனிபோரா ரகம் கடந்த 1992 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் சமையல் செய்ய போதுமான இடம் கிடைக்காமல் போகலாம். இந்த காலக்கட்டத்தில் உதவும் வகையில் மேஜிக் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சாதம் சாப்பிடுவதற்கு மிகுந்த மிருதுவாகவும் இருக்கும். இந்த அரிசியில் மாவு சத்து குறைவாக இருப்பதால், சாதம் மிருதுவாக காணப்படும். இந்த அரிசி ஆந்திரா, பிகார், ஒடிஷா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அவ்வப்போது பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் இந்த அரிசியை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
இசையமைப்பாளர் ஆதித்யனை நினைவூட்டும் ‘ரோஜா மலரே’ பாடல்கள்!
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?