புழக்கத்தில் இருந்த 76 சதவிகித ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 19-ஆம் தேதி புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதன்படி, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் அவசர தேவைக்காக ரூ.2000 நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாகவும் தற்போது அதன் தேவை நிறைவடைந்து விட்டதாகவும் ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் புழக்கத்தில் இருந்த 76 சதவிகிதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும் ரூ.0.84 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெற வேண்டியுள்ளது. இதுவரை 76 சதவிகிதம் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 87 சதவிகிதம் வங்கிகளில் டெபாசிட்களாகவும் 13 சதவிகிதம் ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இதனால் கடைசி நேரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்க்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்