ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (டிசம்பர் 9) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ். இவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
2021 டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில் மீண்டும் 3 வருடங்களுக்கு அவரது பதவிக்காலம் மத்திய பாஜக அரசால் நீட்டிக்கப்பட்டது.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்தா தாஸ் 15வது நிதி குழுவின் உறுப்பினராக இருந்தார். அதற்கு முன் மத்திய அரசாங்கத்தின் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளராக அவர் பணிபுரிந்தார்.
சக்திகாந்தா தாஸின் பதவிக்காலம் நாளை (டிசம்பர் 10) முடிவடைய இருக்கிற நிலையில்தான், ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய்த் துறை செயலாளராக பதவி வகிக்கிறார்.
மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடரை சேர்ந்த 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவருக்கு வருவாய், வரி என பல துறைகளில் 33 வருட அனுபவம் உள்ளது.
இவர் ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’உண்மையான சாம்பியன்’ : சோனியா காந்தி பிறந்தநாளில் குவியும் தலைவர்கள் வாழ்த்து!
நாடாளுமன்றத்தில் ஆதரவு சட்டமன்றத்தில் நடிப்பு : ஈபிஎஸ் மீது ஸ்டாலின் தாக்கு!