ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு கொள்கை அமல்படுத்தப்பட்ட போது ரூ.2000 நோட்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-ஆம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஆர்.பி.ஐ சட்டம் 1934 24 ( 1) பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை திரும்ப பெற்ற பிறகு பொருளாதார நாணய தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ.2000 நோட்டுகள் கொண்டு வரப்பட்டது.
தற்போது ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு உள்ளதால் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியது.
எனவே 2018 -19-ஆம் காலாண்டில் ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் சுமார் 89 சதவிகிதம் 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி ரூ.6.73 லட்சம் கோடி உச்சத்தில் இருந்தது. இது 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி ரூ.3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
ரூ.2000 நோட்டுகள் பொதுவான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதில்லை என்பதும் தெரிகிறது. பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சுத்தமான நோட்டுக் கொள்கையின் படி புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.2000 நோட்டு விநியோகத்தை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். மே 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்?