கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார். அதற்கு பிறகு டாடா சன்ஸ் குழும ட்ரஸ்டியாக நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டார். ரத்தன் டாடாவுக்கு மும்பை அலிபாக்கில் பெரிய பங்களா, ஜூகு பீச் அருகே இரு அடுக்கு மாடி வீடுகள் உள்ளிட்ட 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இது தவிர , வங்கிகளில் 350 கோடி பணம் இருப்பு உள்ளது. இவை அனைத்தும் ரத்தன் டாடாவின் அறக்கட்டளை, அவரின் சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் ஒன்று விட்ட இரு சகோதரிகளுக்கு பிரித்தளிக்கப்படும் என தெரிகிறது. இதில், ஜிம்மி டாடாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் வயது முதிர்ந்த நிலையில் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
ரத்தன் டாடாவுடன் அவரின் உதவியாளரான சாந்தனு சேர்ந்து 6 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னதாகவே ரத்தன் டாடாவின் மனதுடன் நெருக்கமாக இருந்தவர்கள் இருவர். அதில், ஒருவர் சுப்பையா.ரத்தன் டாடாவின் உதவியாளர். மற்றொருவர் ராஜன் ஷா. இவர்தான் ரத்தன் டாடாவின் பிரத்யேக சமையல்காரர். இவர்கள் இருவரும் ரத்தன் டாடாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள். ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அவருடன் இவர்கள் இருவரும் செல்வார்கள். அப்போது, ரத்தன் டாடாவின் ஆடை வடிவமைப்பாளரே இவர்களுக்கும் ஆடைகளை வடிவமைத்து கொடுப்பார். அந்தளவுக்கு இருவர் மீதும் ரத்தன் டாடா வாஞ்சையுடன் இருந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் தன் சொத்தில் கொஞ்சம் ரத்தன் டாடா ஒதுக்கியதாக தெரிகிறது. தனது உயிலில் ரத்தன் டாடா சுப்பையா , ராஜன் ஷா ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, ரத்தனின் மனதுக்கு நெருக்கமான மற்ற இருவர் டிடோ என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மற்றும் கோவா என்ற நாட்டு நாய். இந்த இரு நாய்களின் பெயரிலும் கொஞ்சம் பணத்தை ரத்தன் டாடா ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது, டிடோ , கோவா செல்லப்பிராணிகள் ரத்தன் டாடாவின் சமையல்காரர் ராஜன் ஷா பராமரிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு ரத்து!
’டில்லி வில் ரிடர்ன் சூன்’ – ‘கைதி – 2’ குறித்து லோகேஷ் கனகராஜ்