இந்தியாவில் நேற்று பிறை தென்பட்டதை முன்னிட்டு இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் இன்று (ஏப்ரல் 22) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் மார்ச் 22 ம் தேதி தொடங்கியது. இந்த ரமலான் மாதத்தில்தான் இறைவனால் நபிகள் பெருமகனாருக்கு புனித நூலான திருக்குரான் அருளப்பட்டது.
மேலும் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றாக இந்த ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர்.
பிறை தெரிந்தது முதல் தினமும் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமல் கடுமையான நோன்பு விதிகள் கடைபிடிக்கப்படும்.
மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே இஃப்தார் விருந்துடன் நோன்பு திறக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 29 முதல் 30 நாட்கள் கொண்டதாக ரமலான் மாதம் கணக்கிடப்படுகிறது.
நோன்பு நாட்கள் முடிந்து ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடுவர். அதுவும் பிறை தெரிவதைப் பொறுத்தே ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும்.
அதன்படி அரபு நாடுகளில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று மாலை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பிறை தென்பட்டதை அடுத்து நாளை (இன்று) ரம்ஜான் பண்டிகை கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.
இதனையடுத்து நேற்று இரவே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நள்ளிரவிலும் குடும்பம் குடும்பமாக புத்தாடை மற்றும் பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
மேலும் இல்லாதவர்க்கு இயன்றதை கொடுக்கும் ஈகையின் திருநாளாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னம்பலம் சார்பாக இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்!
கிறிஸ்டோபர் ஜெமா
கிச்சன் கீர்த்தனா: பனிவரகு காஷ்மீரி புலாவ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!