நாய்க்காக ஒரு கொலை!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங் (38).
ஆஸ்திரேலியா பெண் கொலை
இவர் சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி ராஜ்விந்தர் தனது மனைவியுடன் சண்டை போட்டு விட்டு குயின்ஸ்லாந்தில் உள்ள வோங்கெட்டி கடற்கரைக்குக் கையில் பழங்கள் மற்றும் கத்தியுடன் சென்றார்.
அதே சமயம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருந்தக பணியாளரான டோயா கார்டிங்லி தனது வளர்ப்பு நாயுடன் கடற்கரைக்கு சென்றார். அப்போது கார்டிங்லியின் நாய் ராஜ்விந்தரை பார்த்துக் குரைத்துள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கார்டிங்லியை ராஜ்விந்தர் கொலை செய்துள்ளார்.
கார்டிங்லியின் உடலைக் கடற்கரை மணலில் புதைத்து விட்டு நாயை அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்து விட்டு வீட்டிற்குத் திரும்பினார்.
தப்பி ஓடிய குற்றவாளி
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் கார்டிங்லியின் உடலை ஆஸ்திரேலியா போலீஸ் மற்றும் அவரது தந்தை இணைந்து கண்டு பிடித்தனர்.
கொலை செய்தது குறித்து ஆஸ்திரேலியா போலீஸ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராஜ்விந்தர் தான் கொலை செய்தது என்பதை ஆஸ்திரேலியா போலீஸ் உறுதி செய்தது.
ஆனால் கொலை செய்த 2வது நாளே, அதாவது அக்டோபர் 23 (2018) அன்று ராஜ்விந்தர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியா தப்பி வந்துவிட்டார்.
ஆனால் அவர் இந்தியாவில் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியாமலேயே இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா போலீஸ் ராஜ்விந்தர் சிங்கை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 1 மில்லியன் டாலரை சன்மானமாக அறிவித்தது. இது இந்திய மதிப்பில் 5.5 கோடி ஆஸ்திரேலிய அரசு இதுவரை அறிவித்த பரிசுத்தொகையில் இதுவே மிக அதிகம் .
4 வருடங்களுக்கு பிறகு கைது
தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அரசு ராஜ்விந்தர் சிங்கை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தியது.
இதற்கு ஒப்புதல் அளித்ததோடு பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ராஜ்விந்தருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீசை பிறப்பித்தது. நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் நவம்பர் 21 ஆம் தேதி (2022) ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டையும் பிறப்பித்தது.
தொடர்ந்து சிபிஐ அளித்த விவரங்களின் அடிப்படையில், ராஜ்விந்தர் சிங்கை டெல்லி போலீஸ் நேற்று (நவம்பர் 25) கைது செய்தது. கொலை நடைபெற்று 4 வருடங்கள் கழித்து ராஜ்விந்தர் பிடிப்பட்டார்.
ராஜ்விந்தர் சிங் தற்போது அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. ஆனால் அவர் ஒரு சில நண்பர்களுடன் மட்டும் தொடர்பில் இருந்துள்ளார்.
ராஜ்விந்தர் சிங்கை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியா போலீஸிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
ராஜ்விந்தர் சிங்கை பித்து தருபவர்களுக்கு ஆஸ்திரேலியா அரசு அறிவித்து 5.5 கோடி பரிசு வழங்கும் என்று அறிவித்த நிலையில், தற்போது குற்றவாளி ராஜ்விந்தரை பிடித்துள்ள டெல்லி போலீசுக்கு சொன்னபடி பரிசு வழங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
மோனிஷா
”ரயில் இன்ஜினை காணோம்”: பீகாரில் நடந்த பலே திருட்டு!
பண மதிப்பழிப்பு நடவடிக்கை 26 மணி நேரத்தில் எடுக்கப்பட்டதா?