ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பொரங்கி என்னும் பகுதியில் நடைபெற்ற என்.டி.ஆர்., நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வவல்லமை பொருந்திய மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய அரசியலில் உச்சத்தில் இருந்தபோது ஒன்றுபட்ட ஆந்திர அரசியலில் சக்திமிக்க அரசியல் தலைவராக உருவெடுத்தவர் நடிகர் என்.டி.ராமாராவ்.
சினிமா மூலம் அரசியலுக்கு வந்து முதல்வரானவர் நந்தமுரி தாரக்க ராமராவ் என்ற என்.டி.ராமராவ்.
1950 ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க துவங்கிய ராமராவ் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமா மீது தீவிர மோகம் கொண்ட ஆந்திர மக்கள் என்.டி.ஆர் உருவத்தில் கடவுள் கிருஷ்ணரை பார்த்தனர்.
புராண படங்களில் அவர் ஏற்று நடித்த கடவுள் கதாபாத்திரங்கள் ஆந்திர மாநில மக்களிடம் பெரும் தாக்கத்தையும், அவர் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
நடிப்பை துறந்து அரசியலில் பங்கேற்ற என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். மேலும் மக்களை சந்திக்கும் வகையில் சுமார் 7,500 கி.மீ தொலைவு சைதன்ய ரதம் எனும் பெயரிடப்பட்ட வாகனத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டார்.
1986 ம் ஆண்டில் நடைபெற்ற ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில் 202 இடங்களில் வெற்றிபெற்றனர் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள். தொடர்ச்சியாக மூன்று முறை மாநில முதல்வராக பதவி வகித்தார்.
சுதந்திர இந்தியாவில் கேரள மாநிலம்,தமிழ்நாட்டை தொடர்ந்து மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.
அவரது நூற்றாண்டு விழா விஜயவாடா அருகே உள்ள பொரங்கி என்னும் பகுதியில் நேற்று (28 ம் தேதி) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
என்.டி. ராமராவின் மகன் பாலகிருஷ்ணா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் பங்கேற்க சென்ற ரஜினிகாந்தை விமான நிலையத்திற்கே வந்து வரவேற்று விழாவிற்கு அழைத்துச் சென்றார் நடிகர் பாலகிருஷ்ணா.
இராமானுஜம்