ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களின் பிரச்சினைகள் மற்றும் பணி மாற்றம் தொடர்பான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது.
ரயில்களை ஓட்டும் பணியிலும் தண்டவாளப் பராமரிப்புப் பணியிலும் பெண் ஊழியர்கள் இணைந்த பிறகே அந்தப் பணிகளின் கடினமான தன்மையை அவர்கள் உணர்கின்றனர். பெண் ஊழியர்களுக்கு சேவைகள் மற்றும் வசதிகள் வழங்குவதில் பெரும் குறைகள் காணப்படுகின்றன.
அவர்களுக்கு நிரந்தரமில்லாத பணி நேரங்களும் உரிய நேரத்தில் ஓய்வு இல்லாததும் இதற்கு உதாரணங்களாகும்.
பெண் ஓட்டுநர்களும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களும் கடுமையான, பாதுகாப்பற்ற பணிச்சூழல் காரணமாக தங்கள் பணியை மாற்றிக் கொள்ள விரும்புகின்றனர். தங்களை வேறு பணிக்கு மாற்றக் கோரி பெண் ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ரயில்வே மண்டலங்களில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களின் பணி மாற்றம் தொடர்பான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் “இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. இவ்வாறு பணி மாற்றம் கோரும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை அனுப்பி வைக்கவும்” என்று கோரப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்