பெண் விவசாயிகளிடம் ராகுல் காந்திக்கு பெண் பாருங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களுடன் மக்களாக பழகக்கூடியவர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மண்டியா கிராமத்து விவசாயிகளை சந்தித்தார் ராகுல் காந்தி.
இந்த மாதம் ஜூலை 8ஆம் தேதி டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்துக்கு சாலை மார்கமாக சென்ற ராகுல் காந்தி வழியில் காரை நிறுத்தி சோனிபட் விவசாயிகளைச் சந்தித்தார்.
அப்போது விவசாயிகளுடன் நேரம் செலவிட்ட ராகுல் காந்தி, எவ்வளவு ஏக்கரில் பயிரிடுகிறீர்கள், பயிரிட எவ்வளவு செலவாகும், இதில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டரை கொண்டு நிலத்தை உழுது, பின் நாற்று நடவும் செய்தார்.
அப்போது சோனிபட் பகுதி பெண் விவசாயிகள் சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை சமைத்து ராகுல் காந்திக்காக வயலுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு கட்டிலில் அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி, பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
என் வீட்டை அரசு பிடுங்கிக்கிச்சு!
அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு கண்புரை பாதிப்பு இருந்தது. அதை கேட்டறிந்த ராகுல் காந்தி அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.
அப்போது ஒருபெண், ‘எங்களை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கேட்க, அதற்கு ராகுல் காந்தி, ‘எனக்கு வீடு இல்லை. என்னுடைய வீட்டை அரசு பிடுங்கிவிட்டது’ என்று கூறினார்.
இதற்கு உண்மையாகவா என வெகுளியாக் கேட்ட பெண்களிடம் ஆமாம் என்று பதிலளித்தார் ராகுல் காந்தி.
உடனடியாக, தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு தொடர்பு கொண்ட ராகுல் காந்தி, ”இங்கு 20 பெண் விவசாயிகள் இருக்கிறார்கள். நமது வீட்டிற்கு வந்து உணவருந்த ஆசைப்படுகிறார்கள்” என்று கூற, பிரியங்கா காந்தி எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று அழைத்தார்.
இந்நிலையில் சோனிபட் மண்டியா கிராமத்து பெண் விவசாயிகள், தங்கள் கிராமத்தில் இருந்து தெசி நெய், லசி, ஊறுகாய் உள்ளிட்டவற்றை சமைத்து எடுத்துக்கொண்டு ஒரு வேனில் டெல்லி புறப்பட்டனர்.
இந்தசூழலில் சோனிபெட் பெண் விவசாயிகள் சோனியா காந்தி வீட்டுக்கு வந்து உணவருந்திய வீடியோவை இன்று (ஜூலை 29) ஷேர் செய்துள்ளார் ராகுல் காந்தி.
தாங்கள் எடுத்து வந்த பாரம்பரிய உணவு பொருட்களை சோனியா, ராகுல், பிரியங்காவிடம் கொடுத்து மகிழ்ந்த பெண் விவசாயிகள் அவர்களுடன் கலந்துரையாடினர். அங்கு சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் கிராமத்து பெண்களுக்கு விருந்தளித்தனர்.
விலைவாசி உயர்வு, பயிர்களுக்கான மருந்து, உரம், மின்சாரம் ஆகியவற்றை குறித்து பேசிய பெண்கள், ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
இந்த உரையாடலில் தங்களது சிறுவயது நினைவுகளை பகிர்ந்துகொண்ட பிரியங்கா காந்தி, “நீங்கள் ராகுலை பார்த்து சமத்தான பையன் என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால் அப்படி இல்லை. சிறுவயதில் சரியான குறும்புக்காரர். அதற்கு நான் தான் திட்டுவாங்குவேன்” என கூறினார்.
இந்த உரையாடலின் ஒரு பகுதியாக ஒரு பெண் சோனியா காந்தியிடம், ‘ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்’ என்று கேட்க, அதற்கு சோனியா காந்தி, ‘நீங்களே ஒரு நல்ல பெண்ணாக பாருங்கள்’ என்று பதிலளித்தார்.
இதை கேட்டதும், பிரியங்கா காந்தி உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அவ்விடமே சிரிப்பலையாய் மாறியது.
இறுதியாக பெண் விவசாயிகள் கிளம்பும் போது அவர்களுடன் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி இருவரும் நடனமாடினர். இதுதொடர்பான வீடியோவை ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
52 வயதாகும் ராகுல் காந்தி திருமணம் தொடர்பாக கூறுகிற போது, ‘சரியான பெண் கிடைக்கும் போது நான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா