கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரை இன்று (டிசம்பர் 4) பார்வையிடுவதற்காக சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஷாஹி ஜமா மஸ்ஜித் பள்ளிவாசல் உள்ளது. இந்த கோயில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ஷாஹி ஜமா மஸ்ஜித் உள்ள பகுதியில் முன்னதாக ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதனை உறுதிப்படுத்த அப்பள்ளிவாசலை ஆய்வு செய்ய வேண்டும் என்று சம்பல் உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நவம்பர் 24ஆம் தேதி ஜமா மஸ்ஜித்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் அமைத்த குழு சென்றது. அப்போது அவர்கள் மீது கல் எரியப்பட்டதால், கலவரம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில் கலவரம் நடந்த பகுதியை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று சம்பலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் காசிபூர் அருகே சென்றுகொண்டிருந்த போது, உத்தரப் பிரதேச போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்களுடன் அம்மாநிலத்தை சேர்ந்த ஐந்து எம்.பிக்களும் உடனிருந்தனர்.
முன்னதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காசியாபாத் போலீஸ் கமிஷ்னர் அஜய் குமார் மிஷ்ரா கூறுகையில் “சம்பல் நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால், நாங்கள் ராகுல் காந்தியை அங்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். அதற்காக தேவையான போலீஸ் படைகள் தயாராக இருக்கிறார்கள்.” என்றார்.
சம்பல் நகரத்தில் டிசம்பர் 1ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பிஎன்எஸ்எஸ் பிரிவு 163 கீழ் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, இந்த வருட இறுதி வரை (டிசம்பர் 31) நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டிசம்பர் 1ஆம் தேதி கலவரம் நடந்த இடத்தை மூன்று உறுப்பினர்கள் கொண்ட நீதிபதி குழு ஆய்வு செய்தது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
காவி உடை அணியாதது ஏன்? – சாமியாராக மாறிய புவனேஸ்வரி சொல்லும் விசித்திர காரணம்!
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாகிச்சூடு!