கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, மைசூரில் உள்ள பதன்வாலு காதி கிராமத் தொழில் மையத்தில் இன்று (அக்டோபர் 2) மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்திக்கு ராகுல் மரியாதை
இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்று வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடாகாவில் காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள பதன்வாலு காதி கிராமத் தொழில் மையத்தில் இன்று சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கதர் ஆடை தயாரிப்புக்கு பேர் போன இந்த கிராமத்துக்கு 1927 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வந்தார்.
இந்நிலையில், அங்கு நடைபெற்ற அனைத்து மதத்தினரின் கூட்டு பிரார்த்தைனையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் படத்திற்கு கதர் நூல் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்தியாவை ஒன்றிணைப்போம்!
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மை மற்றும் அகிம்சை வழியில் நடக்க மகாத்மா காந்தி கற்றுக் கொடுத்தார். அன்பு, கருணை, நல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை விளக்கினார்.
காந்தி பிறந்தநாளான இன்று, அவர் அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்தது போல், நாம் அனைவரும் இந்தியாவை ஒன்றிணைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
21 நாட்களில் 511 கி.மீ. தூரம்!
தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கோண்டு வருகிறார் ராகுல்காந்தி. கடந்த 21 நாட்களில் இதுவரை சுமார் 511 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவருடன் நடைபயணத்தில் பங்கேற்று வருகின்றனர்.
மகாத்மா காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மைசூரில் உள்ள தாண்டவபுரத்தில் இருந்து நடைபயணத்தை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் தொடங்கியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா