சிறைதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் எம்.பி. ஆன ராகுல் காந்திக்கு, அவர் முன்பு வசித்த அதே அரசு இல்லம் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 8) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மோடி குடும்பப்பெயர் வழக்கில் சூரத் நீதிமன்றம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இதனையடுத்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்யும்படி மக்களவை வீட்டு வசதிக் குழு உத்தரவிட்டது.
இதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது. இதனையடுத்து ராகுல் காந்தி தங்களது வீட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் “எங்கள் வீடு உங்கள் வீடு” என்ற பிரச்சாரத்துடன் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் முதன்முதலில் ராகுல்காந்திக்கு தனது வீட்டை அளிப்பதாக கூறினார்.
எனினும் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள தனது தாயார் சோனியா காந்தியின் வீட்டிற்கு சென்ற ராகுல் தற்போது அங்கு வசித்து வருகிறார் .
இதற்கிடையே கடந்த 4ஆம் தேதி அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து வயநாடு எம்.பி பதவியை மீண்டும் பெற்றுள்ள ராகுல்காந்தி, நேற்று முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், துக்ளக் சாலையில் அவர் முன்பு தங்கியிருந்த அதே அதிகாரப்பூர்வ இல்லம் இன்று ராகுல்காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
“मेरा घर पूरा हिंदुस्तान है”@RahulGandhi 🏡🇮🇳❤️ pic.twitter.com/7IAER4Jn4y
— Supriya Shrinate (@SupriyaShrinate) August 8, 2023
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இது மட்டுமல்ல… இந்தியா முழுவதும் எனது வீடு தான்” (மேரா கர் பூரா ஹிந்துஸ்தான் ஹை) என்று ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 19 வருடமாக டெல்லியில் வசித்து வரும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு 3 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரும்ப உள்ளார் ராகுல்காந்தி.
கிறிஸ்டோபர் ஜெமா
உயிருக்கு போராடும் விஜய் பட இயக்குநர்!
நவீனமயமாக்கப்பட்ட பாலருவி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!