மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியை சந்தித்த மாணவிகள் 3 பேர், ஹெலிகாப்டரில் பறக்க ஆசை எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளும்போது, அந்த மாணவிகளையும் வரவழைத்து ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றுள்ளார் ராகுல் காந்தி.
நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி யுமான ராகுல் காந்தி. நடைபயணத்தின் போது அவ்வப்போது மக்களை சந்தித்து உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவம்பர் 29-ஆம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது 11-ஆம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவியான கிரிஜா ஆகியோர் ராகுல் காந்தியைச் சந்தித்தனர். மாணவிகளின் கல்வி பற்றியும், எதிர்கால லட்சியம் குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

அப்போது 3 மாணவிகளும் தங்களுக்கு ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடம் எதார்த்தமாக கூறினர். உடனே, மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல் காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார்.
அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஹெலிகாப்டர் பயண ஏற்பாட்டின்போது, மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் சந்தித்த மாணவிகளான ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல் காந்தி தன்னுடன் அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், “முதல்முறையாக ஹெலிகாப்டரில் பறந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
குடும்பத்தினர் என்ன விரும்புகிறார்கள், சமுதாயம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்குமாறு ராகுல் காந்தி அறிவுறுத்தினார்” எனத் தெரிவித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்