raghul ghandhi bharat joda yatra

“அந்த வலி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் புரியாது”: ராகுலின் யாத்திரை நிறைவு!

இந்தியா

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று (ஜனவரி 30) நிறைவடைந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது.

135 நாட்களில் 75 மாவட்டங்கள், 14 மாநிலங்கள் மற்றும் 3570 கிலோ மீட்டரை கடந்து இறுதி நாளான இன்று (ஜனவரி 30) ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் மூவர்ண கொடியை ஏற்றி யாத்திரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி.

இறுதி நாளான இன்று ஷெர் – ஐ – காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி,

“நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ இந்த யாத்திரையைத் தொடங்கவில்லை. நாட்டு மக்களுக்காகத்தான் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டேன்.

இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம்.

இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளைப் பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.

என்னுடைய பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி படுகொலையைக் குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கிடைத்த போது அனுபவித்த வலி வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு ஒருபோதும் புரியாது.

வன்முறையைத் தூண்டும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது.

ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அந்த வலி புரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு புரியும்.

ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீரிகள் புரிந்துகொள்வார்கள்.

இந்த யாத்திரையின் நோக்கம் என்னவென்றால் ஒருவரின் அன்பானவரின் உயிரிழப்பை தொலைப்பேசி அழைப்பு மூலம் அறிவிப்பதற்கு முடிவு கட்டுவதேயாகும்.

அது ராணுவ வீரராக இருந்தாலும், சிஆர்பிஎப் வீரராக இருந்தாலும் அல்லது எந்த ஒரு காஷ்மீரியாக இருந்தாலும் சரி.

அதுமட்டுமின்றி ஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர்கள் யாரும் இவ்வாறு நடந்து வர முடியாது. அவர்கள் இவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார்கள், இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பது மட்டுமல்ல, அவர்கள் பயப்படுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை சென்றால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எனக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. நான் இதுகுறித்து யோசித்தேன். பின்னர், எனது வீடான ஜம்மு காஷ்மீரில் எனது மக்களுடன் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனது வெள்ளை சட்டையைச் சிவப்பு நிறமாக மாற்ற எனது எதிரிகளுக்கு ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று நினைத்தேன். காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை, மாறாக மிகுந்த அன்புடன் அவர்கள் இதயத்தைக் கொடுத்துள்ளனர்’ என்றார்.

மோனிஷா

திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்: ஹன்சிகா பேட்டி!

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *