அமலாக்கத்துறை பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்!

Published On:

| By Monisha

raghul navin as enforcement directorate

அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் இன்று (செப்டம்பர் 16) செயல்பட உள்ளார்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் மிக முக்கியமான இயக்குநரகங்களில் ஒன்று அமலாக்கத்துறை. இந்த அமலாக்கத்துறை இயக்குநராக செயல்பட்டு வந்த சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை அமலாக்கத் துறை பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் செயல்படுவார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமலாக்கத்துறை இயக்குநராக கடந்த 2018 ஆம் ஆண்டு சஞ்சய் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரையிலேயே நீட்டிக்க முடியும். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் மூலம் 5 ஆண்டுகள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட சஞ்சய் மிஸ்ரா 2 ஆண்டுகள் பணியில் நீடித்த நிலையில் அவரது பதவிக்காலத்தை மத்திய அரசு ஓராண்டு நீடித்தது.

தொடர்ந்து அதன் பின்னர் 2021-2022, 2022-2023 என மூன்றாவது முறையாக அவருடைய பதவியை மத்திய அரசு நீட்டித்தது. இந்நிலையில் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே சஞ்சய் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் சஞ்சய் மிஸ்ரா பதவியில் தொடர்வது அவசியம் என்று கூறி குறைந்தபட்சம் அவரது பதவிக்காலத்தை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை கடந்த ஜூலை 28 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், “நாட்டு நலன் கருதி அவரது பதவிக்காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம். ஆனால், அதன் பிறகு அவரது பதவிக்காலம் ஒருபோதும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தான் அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோனிஷா

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 778 பேர் பலி!

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel