விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் யாராவது வாக்களித்தால் அவர்களை கட்சியில் இருந்து நீக்க தயாரா என எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூன் 17) சாவல் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜூன் 15ஆம் தேதி அறிவித்தார்.
அதில், “சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற அராஜக திமுக ஆட்சியில் ஜூலை 10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று (ஜூன் 17) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த ஒவ்வொரு தேர்தலும் இன்றைய மக்கள் மறந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற பரங்கிமலை கண்டோன்மண்ட் தேர்தலில் தான் முதல் முதலாக ‘பூத் கப்சரிங்’ என்பது அரங்கேறியது.
சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் போன்ற திமுகவின் மூத்த நிர்வாகிகள் தாக்கப்பட்டனர்.
இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அப்போது அவர் எங்கு இருந்தார், எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும்தான் எந்தவித கலவரங்களும் இல்லாமல் இருந்தது. ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழகம் தான்.
அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பல இடங்களில் அதிமுகவிற்கு டெபாசிட் பறிபோனது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்ற பயத்தினால் தான் அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது. அதற்கு திமுகவை குறைகூறுவது நல்லதல்ல.
எடப்பாடிக்கு, ஆர்.எஸ்.பாரதி சவால்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவினர் யாரும் வாக்களிக்கக்கூடாது.
அதாவது, அதிமுக ஒன்றிய செயலாளர், கிளை கழக செயலாளர், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கிறார்களா என்பது கவனிக்கப்படும்.
அப்படி அவர்கள் வாக்களித்திருந்தால், அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்துவிட்டதாக அர்த்தம்.
அதிமுக கட்சி நிர்வாகிகள் யாராவது இந்த இடைத்தேர்தலில் வாக்களித்தால் அவர்களை கட்சியில் இருந்து விலக்கி விடுவதாக அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என அவருக்கு சவால் விடுகிறேன். ஆனால், அவர் அதை செய்யமாட்டார்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுகதான். இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டால்தான் வன்னியர்கள் தற்போது அதிக முன்னேற்றங்களை அடைந்துள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு, இன்னும் 1000 ராமதாஸ்கள் சொன்னாலும் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தான் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெறும்.
பாமகவின் சின்னமே தற்போது பறிபோய்விட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சின்னத்தில் வாக்கு கேட்டுவிட்டு, தற்போது இந்த இடைத்தேர்தலில் மற்றொரு சின்னத்தில் வாக்குக் கேட்டால் யாராவது அவர்களை மதிப்பார்களா?
திமுகவின் அடித்தளம் வலிமையாக உள்ளது. வேட்பாளர், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலிமையாக உள்ளது. அதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும்” என ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவூதியில் வீசும் கொடூர வெப்ப அலை… 19 ஹஜ் பயணிகள் உயிரிழப்பு!
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து : 5 பேர் பலி!