உத்தரப்பிரதேசத்தில் நடந்த காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்ததை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்துள்ள மாநில அரசு, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வினை நடத்த இன்று (பிப்ரவரி 24) உத்தரவிட்டுள்ளது. Constable written Exam cancelled in UP
உத்தரப் பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற இத்தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.
ஆனால் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மறுதேர்வு நடத்தக்கோரி தேர்வெழுதியவர்கள் கடந்த 5 நாட்களாக உத்தரப்பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்தார்.
அவர், “காவலர் ஆட்சேர்ப்புத் தேர்வினை 50 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் எழுதியுள்ளனர். இது மாநில வரலாற்றில் மிகப்பெரிய தேர்வு.
ஆனால் தேர்வு எழுதியவர்கள் போராடி வரும் நிலையிலும் அரசு அதனை கண்டுக்கொள்ளவில்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவலர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
”ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளின் புனிதத்தன்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதுபோன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.
வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எஸ்டிஎஃப் மூலம் விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”விஜயதரணி மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை” : செல்வ பெருந்தகை
விலகியது ஏன்? – டெல்லியில் விஜயதரணி விளக்கம்!
Constable written Exam cancelled in UP