ராணியின் உடல் அடக்கம்: மக்களுக்கு நன்றி தெரிவித்த சார்லஸ்

இந்தியா

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ஆம் தேதி, தனது 96ஆவது வயதில், ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்தார்.

அவரது உடல் இந்திய நேரப்படி (செப்டம்பர் 20) நள்ளிரவு 12 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ,அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், போன்ற உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராணியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் மக்கள் லண்டன் நகருக்கு வந்து குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் நின்று ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

queen elizabeth funeral

இந்திய நேரப்படி நேற்று (செப்டம்பர் 19) காலை 11 மணி வரை மட்டுமே ராணியின் உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தில் உலக தலைவர்கள், சிறப்புப் பிரதிநிதிகள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகல் 3.10 மணியளவில் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திலிருந்து, ராணியின் உடல் அரசு மரியாதையுடன் மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹேரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பின்தொடர வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு ராணுவ மரியாதையுடன் பீரங்கி வண்டியில் கொண்டு செல்லப்பட்டது.

வழி நெடுகிலும் ராணியின் உடலுக்குப் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் ராணிக்கான இறுதிப் பிரார்த்தனை தொடங்கியது. இந்த பிரார்த்தனையில் உலக தலைவர்கள் உள்பட ராணியின் குடும்ப உறுப்பினர்கள், 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

queen elizabeth funeral

பிரார்த்தனை நிறைவடைந்ததும் பிரிட்டன் முழுவதும் ராணிக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிலிருந்து பக்கிங்ஹாம் வழியாக ஹைட் பூங்கா முனையில் உள்ள வெலிங்டன் ஆர்ச்சுக்கு ராணியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

வெலிங்டன் ஆர்ச்சை ராணியின் உடல் அடைந்ததும், விண்ட்சர் மாளிகை நோக்கி சுமார் 5 கி.மீ ராணியின் உடல் நடந்தே ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

இரவு 8.30 மணியளவில் ராணியின் உடல் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் மகாராணிக்குச் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த ஆராதனையில் 800 பேர் கலந்து கொண்டனர்.

நல்லடக்க ஆராதனை முடிவடைந்தவுடன், தேவாலயத்திற்கு கீழே உள்ள பிரத்தியேக கல்லறைத் தோட்டத்தில் ராணியின் உடல் இறக்கப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு அரச குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற சடங்கிற்குப் பிறகு, மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் அவரது கணவர் பிலிப்பின் கல்லறைக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்த எலிசபெத் ராணியின் உடல் 11 நாட்களுக்குப் பிறகு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராணியின் இறுதிச்சடங்கில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இங்கிலாந்தில் 125-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

உலகம் முழுவதும் ராணியின் இறுதிச் சடங்கு நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் வாயிலாகப் பார்த்து ராணிக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.

இதனிடையே மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது அம்மாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், அஞ்சலி செலுத்த வந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்து உணர்ச்சி வசப்பட்டதாக கூறினார்.
கடந்த 10 நாட்களாக உலகம் முழுவதிலுமிருந்தும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட ஆதரவு, என்னையும் எனது மனைவியையும் மிகவும் ஆழமாகத் தொட்டுள்ளன,

லண்டன், எடின்பரோ, ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் இருந்து நேரில் வந்து ராணியின் வாழ்நாள் சேவைக்கு அஞ்சலி செலுத்த மக்கள் சந்தித்த சிரமத்தைக் கண்டு உணர்ச்சி வயப்பட்டுள்ளோம்.

இந்த துயரத்தின் போது எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த எண்ணற்ற மக்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

ராணியின் உடல் நல்லடக்கம் செய்யத் தூக்கப்பட்ட போது சார்லஸ் கண் கலங்கினார். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ராணியின் சவப்பெட்டியில், “எப்பொழுதும் உங்கள் அன்புடனும், நினைவுகளுடனும், சார்லஸ்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

அயோத்தியில் யோகி ஆதித்யநாத்துக்கு கோயில்!

சென்னையை குளிரவைத்த மழை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *