ராணி எலிசபெத்தின் மரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனையின் மேலாக இரட்டை வானவில் தோன்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 96 வயது இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று காலமானார். லண்டன், இங்கிலாந்து அரச வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் என நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத்.
முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர் கோடை காலத்தை கழிப்பதற்காக ஸ்காட்லாந்தின் பால்மோரல் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்தவாறே சமீபத்தில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸையும் நியமனம் செய்தார்.
உடல்நலக்குறைவால் ராணி மரணம்!
முதுமை தொடர்பான பிரச்சினைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராணி எலிசபெத் பால்மோரல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி மாலை 6.30 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்றிரவு 11) உயிரிழந்தார். தொடர்ந்து பக்கிம்ஹாம் அரண்மனையில் ராணி மறைவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதனையடுத்து ராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வசிப்பிடமான விண்ட்சோர் கோட்டை மற்றும் பக்கிம்ஹாம் அரண்மனைக்கு வெளியே அந்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
திடீரென தோன்றிய வானவில்!
இந்நிலையில் கோட்டையில் ராணியின் மரணத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் கொடி இறக்கத் தொடங்கியதும் அந்த பகுதியில் திடீரென இரட்டை வானவில் தோன்றியுள்ளது.
அதுவும் சரியாக விண்ட்சோர் கோட்டை மற்றும் பக்கிம்ஹாம் அரண்மனைக்கு மேலாக வானவில் தோன்றியதை அடுத்து மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் கோஷமிட்டனர். ஒருவரின் மரணத்தின் போது இப்படி வானவில் தோன்றுவது தொடர்பாக இங்கிலாந்து நாட்டில் பல நம்பிக்கைகள் உள்ளன.
இதனை வீடியோவாக எடுத்த பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வானவில் தோன்றினால் என்ன அர்த்தம்?
இங்கிலாந்தில் ஒருவர் இறந்த நாளில் வானவில் தோன்றினால் அவர் சொர்க்கம் செல்வார் என்று நம்பப்படுகிறது.
மேலும் ஒரு புதிய நல்ல தொடக்கத்தின் அடையாளமாகவும் ஒருவரது இறப்பில் தோன்றும் வானவில் கருதப்படுகிறது.
இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைதொடர்ந்து அவர் வாழ்ந்த அரண்மனைக்கு மேலாக இரட்டை வானவில் தோன்றியது அந்நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ராணி உடனான சந்திப்பை மறக்க முடியாது : பிரதமர் உருக்கம்!