இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 96ஆவது வயதில் நேற்று (செப்டம்பர் 8) காலமானார்.
பிரிட்டன் மக்களின் அதீத அன்பை பெற்ற எலிசபெத்தின் இழப்பை தாங்க முடியாத துயரத்தில் உள்ளனர் இங்கிலாந்து மக்கள்.
இந்நிலையில் , ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவில், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது.
இங்கிலாந்து மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , “2015 மற்றும் 2018இல் இங்கிலாந்து பயணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தேன்.
அது மறக்க முடியாத ஒன்று. அவரது அரவணைப்பையும் அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். இதையெல்லாம் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஐக்கிய ராஜ்ஜியத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.
ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய கண்ணியம், பொது வாழ்க்கையில் நேர்மை மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார்.
எல்லா காலத்திலும் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரின் மறைவுக்கு துக்கத்தில் இருக்கும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும், ராயல் குடும்பத்தினருக்கும் இங்கிலாந்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இங்கிலாந்து மக்களுக்கும் அரச குடும்பத்துக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
“அவர் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற ஆட்சியைக் கொண்டிருந்தார், அவருடைய நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்ணியத்துடனும் சேவை செய்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”ராசாத்திக்கு ரெண்டு தோசை ஊற்றித் தரத் தோன்றுகிறது” – லண்டன் தமிழ் பத்திரிகையாளரின் அஞ்சலி!