பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. அவர் பிரிட்டனை 70 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறார்.
இதன் மூலம் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத், தனது 70 ஆண்டுகால ஆட்சியின் போது, இந்தியாவிற்கு இது வரை மூன்று முறை வந்திருக்கிறார்.1961, 1983 ,1997 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வந்துள்ளார்.
ராணி எலிசபெத் 1952 இல் பிரிட்டன் அரியணையில் அமர்ந்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பிரிட்டிஷ் மகாராணியானார்.
அவர் இந்தியா வந்த போது ஆற்றிய உரை ஒன்றில், “இந்திய மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலை” தான் போற்றுவதாகவும், இந்தியாவின் செழுமையும் பன்முகத்தன்மையும் ஒருவித உத்வேகத்தை அளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
1961ஆம் ஆண்டில், ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர், இளவரசர் பிலிப் – எடின்பர்க் டியூக் இருவரும் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் சுற்றுப்பயணம் செய்தனர்.
அப்போது அவர் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். புதுடெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் அழைப்பின் பேரில் குடியரசு தின அணிவகுப்பில் ராணி தனது கணவர் பிலிப் உடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த பயணத்தின் போது, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஃபர் கோட் மற்றும் தொப்பி அணிந்து ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

1969 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு லண்டனில் விருந்து அளித்தார். 1983 இல், காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் (CHOGM)கலந்து கொள்வதற்காக வந்த அவர் அன்னை தெரேசாவையும் சந்தித்தார்.
1997 இல் இந்தியா தனது 50ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய போது சிறப்பு விருந்தினராக ராணி எலிசபெத் கலந்து கொண்டதுதான் அவர் இந்தியாவிற்கு வந்த கடைசி பயணமாக அமைந்தது.
காலனித்துவத்தை பற்றி அவர் அப்போது பேசுகையில் “நமது கடந்த காலங்களில் சில கடினமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதற்கு ஜாலியன் வாலாபாக் ஒரு துன்பகரமான உதாரணம்” என்று குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
ராணி மூன்று இந்திய ஜனாதிபதிகளுக்கும் விருந்தளித்துள்ளார். 1963 இல் டாக்டர் ராதாகிருஷ்ணன், 1990இல் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் 2009இல் பிரதிபா பாட்டீல் ஆகியோருக்கு விருந்தளித்துள்ளார்.

2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து பயணங்களின் போது ராணி எலிசபெத்தை பிரதமர் மோடி சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமர்
”ராசாத்திக்கு ரெண்டு தோசை ஊற்றித் தரத் தோன்றுகிறது” – லண்டன் தமிழ் பத்திரிகையாளரின் அஞ்சலி!