‘மலைப்பாம்புகள் தப்பிக்க யூரின் அடிக்கும்’ – 500 பாம்புகள் பிடித்த ரோஷினி பேட்டி!
பொதுவாக பாம்பு பிடிப்பது போன்ற பணிகளில் ஆண்கள்தான் ஈடுபடுவார்கள். அரிதாக, சில பெண்களும் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபடுபார்கள்.
அந்த வகையில், கேரளாவை சேர்ந்த வனத்துறை அதிகாரியான ரோஷினியும் பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இவர் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக, அவரிடத்தில் லைசென்சும் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 500 விஷ பாம்புகள், விஷம் இல்லாத பாம்புகள், மலைப்பாம்புகளை பிடித்துள்ளார். இதில், மலைப்பாம்புகள் மட்டுமே 100 பிடித்துள்ளார்.
தற்போது, திருவனந்தபுரம் மாவட்டம் பருத்திபள்ளி பகுதியில் வனச்சரகராக பணியாற்றும் ரோஷினியின் செல்போன் ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கிறது. இதனால், அவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்.
தனது பணி குறித்து ரோஷினி கூறுகையில், ‘மலைப்பாம்புகளை பிடிப்பதுதான் சவால் நிறைந்தது. அவற்றின் எடை மற்றும் உடல் பலம் காரணமாக அந்த வகை பாம்புகளை பிடிப்பது கடினமானது.
மலைப்பாம்புகளை பிடிக்கும் போது, தங்களை பாதுகாக்கும் வகையில் அவை சிறுநீரை நமது மேலே கழித்து விடுவது உண்டு. இதன் வாடை பல நாட்களுக்கு போகாது.
எத்தனை முறை குளித்தாலும் போகாது. இதனால், பல நேரங்களில் சாப்பிடாமல் கிடந்துள்ளேன். பாம்புகளை பிடிக்கும் போது, நாமும் கவனமாக இருக்க வேண்டும். பாம்பும் காயமடைந்து விட கூடாது. அதன் முதுகெலும்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பிடிப்பது சவால் நிறைந்தது. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் பாம்புகளை பிடிக்க அழைப்பு வரும். அப்போது, நான் சென்றாலும் எனது கணவர் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார்’ என்கிறார்.
ரோஷினியின் கணவர் சுஜித்குமார் கூட்டுறவுத்துறையில் பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
இப்போது பார்த்தாலும் உத்வேகம் தரும் ‘எதிர்நீச்சல்’!
ஒரே நாடு ஒரே தேர்தல் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!