போர் ஓராண்டு நிறைவு: பைடனின் வருகையும் புதினின் உடல்நிலையும்!

இந்தியா

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் நாளை (பிப்ரவரி 24) ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில் உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்காவின் ஆதரவும் ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலையும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள், உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த 20ஆம் தேதி ‘கீவ்’ நகருக்கு எவ்விதமான முன்னறிவிப்பின்றி பயணம் செய்தார்.

அப்போது அவர், “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போரின் ஓராண்டு நிறைவுக்கு முன்னதாக உக்ரைனுக்கு வலுவான ஆதரவை அமெரிக்கா வழங்கும்” என ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு உறுதியளித்தார்.

அமெரிக்க பட்ஜெட்டில் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதற்காக சுமார் ரூ.4,135 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதும், ரஷ்யா-உக்ரைன் போரை மேலும் தீவிரமாக்குவதாக அமைந்திருக்கிறது.

மறுபுறம் ரஷ்யாவுடன் சீனா கைகோத்திருக்கிறது. ரஷ்யாவுக்குத் தேவையான ஆயுத உதவிகளை சீனா விரைவில் வழங்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து, வரும் காலங்களில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மேலும் உக்கிரமடையும் எனச் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், அதிபர் புதினின் உடல்நிலை குறித்த செய்திகள் பல்வேறு சந்தேகங்களுக்கும், விவாதங்களுக்கும் உள்ளானவைகளாகவே தொடர்கின்றன. அதற்கேற்றாற் போலவே, தற்போது வெளியாகியிருக்கும் புதின் குறித்த வீடியோ, மீண்டும் அவரின் உடல்நிலை குறித்து சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

இது, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடனான (Alexander Lukashenko), புதினின் சமீபத்திய சந்திப்பின்போது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோவை, உக்ரைனின் உள்நாட்டு விவகார ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ (Anton Geraschchenko), சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

putin suffers relapse in health

சுமார் ஒரு நிமிட காட்சி கொண்ட அந்த வீடியோவில், `பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் நாற்காலியில் அமர்ந்தபடி பேசுகிறார் புதின். அப்போது, புதின் தன்னுடைய கால்களை நிலையாக வைக்காமல் நகர்த்திக்கொண்டேயிருக்கிறார். இது பலரிடையே விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உளவுத்துறை அதிகாரி கைரிலோ புடானோவ், “புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். அவர் கூடிய விரைவில் இறந்துவிடுவார்.

புதினுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து எங்களுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது” என ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போதைய உக்ரைன் நிலவரம் குறித்து பேசியுள்ள பெண் ஒருவர், “நாங்கள் வீட்டுக்குள் இருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அப்போது ஒரு குளிர்சாதனப்பெட்டி என் மேல் விழுந்தது, அதனால்தான் பிழைத்தேன். பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கண்டுபிடித்து என்னை வெளியே இழுத்து வந்தனர். இங்கு இருப்பதற்கே பயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடந்துவரும் போர் இரு தரப்பிலும் சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட உக்ரைனுக்கு அதிக ராணுவ ஆதரவை மேற்கத்திய நாடுகள் வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றன. இந்த நடவடிக்கைகளால் மோதல் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!

ஈரோடு கிழக்கு: இரவில் தொடங்கியது பணப்பட்டுவாடா!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *