உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போரை தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதில் கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷ்யா தன் வசப்படுத்தி உள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் அந்நாட்டு ராணுவம், ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இது ரஷ்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே போர் ஓராண்டை கடந்ததை அடுத்து உக்ரைனில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தற்கொலைப்படை தாக்குதல் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தி மிரர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உத்தரவைப் பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தால் வலுவாக இலக்கை அடைய முடியவில்லை.
இதுவரை ஒருங்கிணைந்த ஆயுத தாக்குதலை திறம்பட செய்ய முடியவில்லை. இதனால் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவியை அறிவிக்கும் என வெள்ளை மாளிகை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இப்படி உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வராமல், உக்ரைனுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஓரணியிலும் ரஷ்யா உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் மற்றொரு அணியிலும் தாக்கிக்கொள்ளத் தொடங்கினால்,
அது உலகப்போரை நோக்கிதான் செல்லும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். போர் தொடங்கியது முதலே கோதுமை, சோளம், கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்திருக்கின்றன.
எனவே, ரஷ்யா – உக்ரைன் போரால் உலக அளவில் சுமார் ரூ.170 கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐ.நா தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
தற்போதைய அவசர தேவை என்பது போர் நிறுத்தம். ரஷ்யா உக்ரைன் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டு, உடனடியாகப் போர் நிறுத்தப்படுவது தலையாய தேவையாக இருக்கிறது.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலருக்கு எடை ஏறாதது ஏன்?